அர்ஜுன் தாஸ், சாண்டி மாஸ்டர் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் கைதி, மாஸ்டர் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான அர்ஜுன் தாஸ் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் ‘பாம்’ திரைப்படம் வெளியானது. அடுத்தது ‘ஒன்ஸ் மோர்’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

அதைப்போல் நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் தற்போது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே லியோ, கிஷ்கிந்தாபுரி, லோகா சாப்டர் 1 ஆகிய படங்களில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். இந்நிலையில் அர்ஜுன் தாஸ் மற்றும் சாண்டி மாஸ்டர் ஆகிய இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தை விக்னேஷ் வேணுகோபால் எழுதி இயக்க சோல்ஜர்ஸ் பேக்டரி நிறுவனமும், ரிடாக்டட் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. ஹேஷம் அப்துல் வஹாப் இதற்கு இசை அமைக்க சத்யா வி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்திற்கு சூப்பர் ஹீரோ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும் அந்த போஸ்டரில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் பூஜை இன்று (நவம்பர் 24) சிறப்பாக நடைபெறுகிறது. இந்த பூஜையில் பா. ரஞ்சித், நெல்சன், வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன், கவின், மிர்ச்சி சிவா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


