தலைவர் 173 படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ரஜினியின் அடுத்த படத்தை யார் இயக்கப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வந்த நிலையில், ‘பார்க்கிங்’ படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தான் அந்த வாய்ப்பை தட்டி தூக்கி உள்ளார் என்று கிட்டத்தட்ட உறுதியான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
மேலும் ஏற்கனவே வெளியான அறிவிப்பின்படி ‘தலைவர் 173’ என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. படமானது 2027 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம் வருகின்ற டிசம்பர் 12ஆம் தேதி ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு தலைவர் 173 படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் இந்த படத்தின் இசையமைப்பாளர் யார்? என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. அதன்படி ஆரம்பத்தில் இளையராஜா, ஹிப் ஹாப் ஆதி, அனிருத் போன்றோர்களின் பெயர்கள் அடிபட்டது.
ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், அனிருத் தான் ‘தலைவர் 173’ படத்திற்கு இசையமைக்கப் போகிறார் என்று சொல்லப்படுகிறது. ரஜினியின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் ‘தலைவர் 173’ படத்திற்கு இசையமைக்க இருப்பது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் ரஜினி – அனிருத் கூட்டணி 6வது முறையாக இணைய இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.


