மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை 11 ஆண்டுகளாக சீர் குலைக்க நினைக்கும் பாஜகவின் முயற்சியை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாளை மறுநாள் மக்கள் பெருந்திரள் போராட்டம் சென்னையில் நடைபெறும் என செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப் பெருந்தகை செய்தியாளர் சந்திப்பின் போது, “தொடர்ச்சியாக பாஜக அரசு அரசியல் அமைப்பை சிதைத்து வருகிறது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை சீர் குலைப்பதற்கு 11 ஆண்டுகளாக முயற்சி செய்கிறார்கள். அதன்படி அதன் பெயரை மாற்றுவதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டுவர இருக்கிறார்கள். ஆனால் இந்த திட்டம் மகாத்மா காந்தி பெயரிலேயே இருக்க வேண்டும்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாளை மறுநாள் மக்கள் பெருந்திரள் போராட்டம் சென்னையில் நடைபெறும். மத்திய பாஜக அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை சிதைக்கும் வகையில் இந்தியில் பெயரிட்டு புதிய திட்டத்தை கொண்டு வர முயல்கிறது. இந்தத் திட்டத்தை அழிக்க முயற்சிப்பது என்பது இந்தியாவை அழிக்க முயற்சிப்பதாகவும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், கல்வி நிதி, பேரிடர் பெருவெள்ளம் உள்ளிட்டவற்றுக்கான நிதியை கொடுக்காமல், மாநிலத்தின் மீது நிதி சுமையை ஏற்படுத்துகிறது. மத்திய அரசுக்கு தமிழ்நாட்டைப் பிடிக்கவில்லையா, தமிழ் மக்களை பிடிக்கவில்லையா, தமிழ் மொழியை பிடிக்க வில்லையா? தமிழ்நாட்டின் மீது ஒரு வரலாற்றுப் போரை மத்திய அரசு நிகழ்த்தி வருகிறது.

மகாத்மா காந்தி பெயரில் மீண்டும் இந்த திட்டத்தை நடைமுறையில் கொண்டு வர வேண்டும். இந்த திட்டத்தை சிதைக்க நினைக்கும் பாஜக ஒன்றிய அரசு 125 நாள் என்று கூறி அதற்கான தொகையை மாநிலம் 40% யூனியன் பிரதேசம் 10% வழங்க வேண்டும் என கூறி மாநிலங்கள் மீது நிதிச்சுமையை சுமத்துகிறது, இது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது இதனை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வன்மையாக கண்டிக்கிறது“ என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப் பெருந்தகை கூறியுள்ளாா்.
மோடி அரசின் சர்வாதிகார போக்கை முறியடிக்க வேண்டும் – வேல்முருகன் ஆவேசம்


