spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைகாலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சமூக மாற்றம் நோக்கிய 75 ஆண்டுக்காலப் பயணம்!

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சமூக மாற்றம் நோக்கிய 75 ஆண்டுக்காலப் பயணம்!

-

- Advertisement -

சல்மா

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சமூக மாற்றம் நோக்கிய 75 ஆண்டுக்காலப் பயணம்!

இந்தியாவின் வளர்ச்சிப்பாதையில், தமிழ்நாடு மனித மேம்பாட்டுக் குறியீடுகளில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக, கிராமப்புறப் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் மாநிலம் அடைந்துள்ள முன்னேற்றம், பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறது. இந்த சமூகப் புரட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் 75 ஆண்டுக்காலச் சிந்தனைகள், செயல்களின் விளைவாகும்.

we-r-hiring

தி.மு.க.வின் பங்களிப்பு என்பது, சமூக நீதியையும் சமத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஆழமான சித்தாந்தத்தின் செயல்முறை வடிவமாகும். கிராமப்புறப் பெண்களின் வாழ்வை மேம்படுத்த தி.மு.க. அரசு கொண்டுவந்த முக்கிய சட்டங்கள், கொள்கைகள், திட்டங்கள் ஆகியவை அவர்கள் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை உணர முடிகிறது. தமிழகத்தின் கிராமப்புறங்களுக்குச் செல்லும் எவரும் இதைக் கண்கூடாகப் பார்க்கலாம்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் 75 ஆண்டுக்காலப் பயணத்தை நினைவுபடுத்திக்கொள்ளும்போது, அது மாநிலத்தின் வளர்ச்சி, மக்களின் வளர்ச்சியை மட்டும் கருத்தில்கொள்ளாமல், பாலினரீதியான ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து சமூக நீதியினை நிலைநிறுத்தும் வகையிலும் தன் பயணத்தை வகுத்துக்கொண்டதைக் காண முடிகிறது. இந்த இயக்கத்தின் பெண் ஆளுமைகளையும் அவர்களது பங்களிப்புகளையும்போலவே ஒட்டுமொத்த பெண் சமூகத்தின் விடுதலையையும் சாத்தியப்படுத்துவதற்கான திட்டங்களை அது வகுத்தது, இன்னும் வகுத்துக்கொண்டிருக்கிறது.

நகர, கிராம வேற்றுமைகள்

நாட்டில் மிக அதிக அளவில் நகரமயமாக்கல் நிகழ்ந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாட்டைச் சொல்வார்கள். இங்கே, 48 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் நகரங்களில்தான் வாழ்கிறார்கள். நகரங்களில் கிடைக்கும் வசதிகள், வாழ்க்கைத்தரம் ஆகியவை கிராமங்களிலும் கிடைக்க வேண்டும் என்பதைத்தான் முழுமையான வளர்ச்சி என்று சொல்வோம். அத்தகைய வளர்ச்சியைக் காணும் இலட்சிய நோக்குடன் தி.மு.க. அரசு செலயாற்றிவருகிறது

இந்த இயக்கம் 75 ஆண்டுகளாகச் செயல்பட்டுவருகிறது. 1967 முதல் இன்றுவரை கால் நூற்றாண்டுக் காலத்திற்கு மேல் அக்கட்சி ஆட்சியில் இருக்கிறது. கிட்டத்தட்ட 60 ஆண்டுகளில் வெறும் 25 ஆண்டுகளே ஆட்சியில் இருந்தபோதிலும், தமிழகத்தின் வளர்ச்சிக்குத் தி.மு.க. ஆட்சி அளித்திருக்கும் பங்களிப்புகள் பிறருடன் ஒப்பிட முடியாத அளவுக்கு அதிகமானவை.

நவீன தமிழகத்தைக் கட்டமைத்ததே தி.மு.க.தான் என்றுகூட சொல்லிவிடலாம்.

வேளாண் துறை, தொழில் துறை, சேவைப் பிரிவுகள், உள்கட்டமைப்பு, கல்வி, மருத்துவம் ஆகிய அனைத்திலும் தி.மு.க. ஆட்சி தமிழகத்தின் வளர்ச்சியை உறுதிசெய்திருக்கிறது. இவை தவிர, பெண்கள் முன்னேற்றம், ஒடுக்கப்பட்ட சாதியினரின் முன்னேற்றம், சிறுபான்மையினரின் பாதுகாப்பு, மத நல்லிணக்கம் ஆகியவற்றையும் சாத்தியப்படுத்தியிருக்கிறது. இந்தியா முழுவதும் பரவிவரும் மதவாத அரசியல் நெருப்பு தமிழகத்தைத் தீண்டாமல் இருப்பதற்குக் காரணம், தி.மு.க. இங்கே உருவாக்கிவைத்திருக்கும் மத நல்லிணக்கச் சூழல்தான்.

சொத்துரிமை, கல்வி, இட ஒதுக்கீடு

சமூக நீதியுடன்கூடிய அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைக் கட்டமைத்ததைப் போலவே பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் திராவிட முன்னேற்றக்கழகம் பெரும் பங்காற்றியது. குறிப்பாக, கிராமப்புறப் பெண்களைக் குறிவைத்துப் பல திட்டங்களை வகுத்தது. நகரத்திற்கும் கிராமத்திற்கும் இடையே உள்ள மிக நீண்ட இடைவெளியைக் குறைப்பதாக அந்தத் திட்டங்கள் அமைந்தன.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சமூக மாற்றம் நோக்கிய 75 ஆண்டுக்காலப் பயணம்!

நகரத்தில் பெண்கள் அனுபவிக்கக்கூடிய சுதந்திரத்தையோ, பொருளாதார ரீதியான விடுதலையையோ, கல்வியையோ கிராமத்துப் பெண்கள் அடைந்துவிடுவது அத்தனை எளிதான காரியமாக அன்றைக்கு இல்லை. இந்த நிலையை மாற்றுவதற்காகத் திராவிட முன்னேற்றக் கழகம் மிகப்பெரிய முயற்சிகளை முன்னெடுத்துப் பெருமளவில் வெற்றிபெற்றுப் பெரும் சாதனைகளையும் நிகழ்த்தியிருக்கிறது.

கிராமங்களில் கல்வி நிறுவனங்களோ பயணிக்கும் வழிமுறைகளோ குறைவு என்பது மட்டுமல்ல பெண்களுக்கான சமூக அழுத்தங்களும் அதிகம். கிராமப்புறங்களில் வசிக்கக்கூடிய ஆண்களுக்கும் பெண்களுக்குமான சமூக வாழ்க்கை குறுகியதாக இருந்த காலகட்டத்தில் பெண்களுக்கு மேலும் கூடுதலான அடக்குமுறைகள் இருந்தன என்பது நிதர்சனம். சாதியரீதியாகவும் சமூகரீதியாகவும் அது பெரும் சுமை.

என்னைப் போன்ற இஸ்லாமியக் குடும்பத்தில், கிராமத்தில் பிறந்த ஒரு பெண்ணுக்குக் கல்வி கிடைக்காததன் காரணம், கிராமப்புறங்களில் உள்ள சமூக அழுத்தம்தான்.

இதே இஸ்லாமியச் சமூகத்தைச் சார்ந்த என் சம வயதுத் தோழி மதுரையில் பிறந்ததால், அவரால் பரதநாட்டியம் கற்றுக்கொள்ள முடிந்தது. இதிலிருந்தே கிராமப்புறச் சூழலை உணர்ந்துகொள்ளலாம்.

கிராமத்துப் பெண்கள்மீது சமூக அழுத்தம் எத்தனை தீவிரமாக இருந்தது என்பதையும் நகரத்தில் அந்த சமூகத்தினுடைய அழுத்தம் குறைவாக இருப்பதன் காரணமும் நமக்குத் தெரியும். இன்று கிராமத்தில் வாழக்கூடிய பெண்களுடைய வாழ்க்கையையும் தி.மு.க.வின் திட்டங்கள் மாற்றியமைத்திருக்கின்றன. கிராமப் பெண்களையும் உள்ளடக்கியதாக, பிரத்யேகமான பல திட்டங்கள் இருக்கின்றன. படிப்படியாக அவை மாற்றங்களைக் கொண்டுவந்தன.

அடிப்படை மாற்றங்கள்

கிராமப்புறப் பெண்களின் மேம்பாட்டை உறுதிப்படுத்த, அவர்களின் வாழ்வின் அடித்தளத்திலேயே மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதைத் தி.மு.க. தெளிவாக உணர்ந்துள்ளது. இதில் மிக முக்கியமான மைல்கல், 1989ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் கொண்டுவந்த இந்து வாரிசு உரிமைச் சட்டத் திருத்தம். இதன்மூலம், பெண்களுக்கு முன்னோர்களின் சொத்தில் ஆண்களுக்குச் சமமான பங்கு உண்டு எனச் சட்டம் இயற்றப்பட்டது. மத்திய அரசு இதேபோன்ற சட்டத்திருத்தத்தைக் கொண்டுவருவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் தி.மு.க. அரசு இதைக் கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது. பாலினச் சமத்துவத்தில் இந்தியாவுக்கே முன்மாதிரியாக விளங்கும் மாநிலமாகத் தமிழகத்தை ஆக்கிய பெருமை தி.மு.க.வையே சாரும் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு.

கிராமப்புறங்களில் பெண்களுக்கு நில உரிமையும் சொத்துரிமையும் மறுக்கப்பட்டுவந்தன. இதன் காரணமாக, அவர்கள் பொருளாதார ரீதியாக ஆண்களைச் சார்ந்திருக்கவேண்டியிருந்தது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்திருத்தம், கிராமப்புறப் பெண்களுக்குப் பொருளாதார ரீதியாகச் சுதந்திரம் பெறுவதற்கான சட்டபூர்வமான உரிமையை  வழங்கியது. இது அவர்களுக்குத் தனிப்பட்ட பாதுகாப்பு உணர்வையும் குடும்பத்தில் முடிவெடுக்கும்அதிகாரத்தையும் அளித்தது. ஒரு பெண் தனது சொந்த உழைப்பின்மூலம் ஈட்டிய சொத்து மட்டுமல்லாமல் பரம்பரைச் சொத்திலும் உரிமை கொண்டவர் என்ற கருத்தை இந்தச் சட்டம் உறுதிப்படுத்தியது.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சமூக மாற்றம் நோக்கிய 75 ஆண்டுக்காலப் பயணம்!

பெண் கல்வி

இதேபோல், கல்வி என்பது மேம்பாட்டிற்கான மிக முக்கியமான கருவி என்பதை உணர்ந்து, பெண் கல்வியை ஊக்குவிக்கப் பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. 1989ஆம் ஆண்டு, கலைஞர் தலைமையிலான கழக ஆட்சியில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம் ஆரம்பத்தில் திருமண உதவித்தொகையாக வழங்கப்பட்டாலும், பிற்காலத்தில் படிப்பைத்தொடர்வதற்கான நிதி உதவியாக மாற்றப்பட்டது. கல்வியைக் காட்டிலும் திருமணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கிராமப்புறச் சமூக மனநிலையில் ஒரு பெரிய மாற்றத்தை இந்தத் திட்டம் கொண்டுவந்தது.

விதவைகள் மறுமணத்திற்கான உதவிகள் போன்ற பல்வேறு திட்டங்களைத் தி.மு.க. அரசு கொண்டுவந்தது. சமூக சிந்தனையில், செயல்பாட்டில் இது பெரும் மாற்றமாக அமைந்தது. எட்டாம் வகுப்புக் கல்வி முடித்தால் அப்பெண்களது திருமணம் முடிக்கும்பொழுது, திருமண உதவித்தொகை பெற முடியும் என்கிற சட்டத்தின் வழியாகக் கிராமப்புறப் பெண் குழந்தைகளைப் பள்ளிக்கூடத்திற்குக் கொண்டுவந்து சேர்த்ததைப் பெரும் சாதனையாகச் சொல்லமுடியும். கிராமங்களில் அதற்குமுன் பெண் குழந்தைகளுக்கான கல்வி எட்டாத ஒன்று.

பள்ளியில் படிக்கக்கூடிய பிள்ளைகளுக்குப் பேருந்து வசதிகளை உருவாக்கி அவர்களை நகரங்களோடு இணைத்தது, தி.மு.க. அரசு. அது பெண்களுக்கான மிகப்பெரிய ஒரு வாய்ப்பாக மாறிற்று. மாணவ மாணவிகளுக்கு இலவசமாகப் பயணிக்கும் வாய்ப்பை வழங்கி இன்னும்கூட அந்த நிலையை மேலும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்று கல்வி கற்பதை உறுதிப்படுத்தும் தொடர்பை உருவாக்கியது.

இந்த மாற்றத்தின் விளைவாக, கிராமப்புறப் பெண்குழந்தைகளின் பள்ளி சேர்க்கை விகிதம் அதிகரித்தது. உயர்கல்வி வரை பெண்களின் பங்கேற்பு விரிவடைந்தது.

அது மட்டுமின்றி, அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கியது தி.மு.க. அரசு. இது, காவல் துறை, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எனப் பல்வேறு துறைகளில் கிராமப்புறப் பெண்கள் பணிபுரியும் வாய்ப்பை உருவாக்கியது.

பொருளாதாரச் சுதந்திரம்:

சுயஉதவிக் குழுக்களும் நிதியுதவிகளும்
கிராமப்புறப் பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை உறுதிசெய்வதில், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் (Self-Help Groups) புரட்சிகரமான திட்டமாகப் பார்க்கப்படுகிறது. இத்திட்டம், 1989ஆம் ஆண்டு, தி.மு.க. அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு, கிராமப்புறப் பெண்களை ஒரு குழுவாகச் செயல்பட ஊக்குவித்தது. இந்தக் குழுக்கள் வெறும் நிதி அமைப்புகள் மட்டுமல்ல; அவை பெண்களுக்கான ஒரு சமூக, அரசியல்களமாக உருவெடுத்தன.

இந்தக் குழுக்கள் மூலம் பெண்கள் சிறு சேமிப்பில் ஈடுபட்டு, உள்ளூர் கந்துவட்டிக்காரர்களிடமிருந்து விடுபட்டனர். வங்கிக் கடன்களை எளிதாகப் பெற்று, கைவினைப்பொருட்கள், உணவுப் பொருட்கள், விவசாயம் சார்ந்த பொருட்கள் எனப் பல்வேறு சிறு தொழில்களைத் தொடங்கினர். இது, கிராமப்புறப் பெண்களைக் குடும்பத்தின் பொருளாதாரத்திற்குப் பங்களிப்பவர்களாக மாற்றியது. குடும்பத்தில் அவர்களது மரியாதை உயர்ந்தது. இதன்மூலம் கிராமப்புறப் பொருளாதாரமும் வலுவடைந்தது. பெண்களின் கூட்டுச் செயல்பாடு, உள்ளூர் சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான தளமாகவும் அமைந்தது.

உரிமைத்தொகை
சுய உதவிக் குழுக்களின்மூலம் பெண்கள் பொருளாதாரத் தன்னிறைவு பெற்றதன் நீட்சியாக, தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம், கிராமப்புறப் பெண்களின் கைகளில் நேரடியாகப் பணத்தைக் கொடுத்து, அவர்களின் நிதிச் சுதந்திரத்தை உறுதிசெய்கிறது. இது, அவர்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்திசெய்யவும், குடும்பத்தில் அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கவும் உதவுகிறது. இந்தப் பணம், பெண்களின் சுயமரியாதைக்கும் தன்னம்பிக்கைக்கும் வழிவகுக்கிறது.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சமூக மாற்றம் நோக்கிய 75 ஆண்டுக்காலப் பயணம்!

‘புதுமைப்பெண்’ திட்டம்:

பெண்கள் உயர்கல்விக்கான புதியபாதை

தமிழ்நாடு அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையால் செயல்படுத்தப்படும் முன்னோடித் திட்டம்தான் ‘புதுமைப்பெண்’ திட்டம், இது மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.

பொருளாதாரச் சூழல் காரணமாகப் பெண்கள் உயர்கல்வியைத் தொடர முடியாமல் போவதைத் தடுத்து, அவர்களைப் பொருளாதாரரீதியாகவும் சமூக ரீதியாகவும் மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இத்திட்டத்தைத் தலைவர் ஸ்டாலின் அவர்களின் அரசு 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி தொடங்கியது.

திட்டத்தின் முக்கிய அம்சங்களும் நோக்கமும் ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் மையக் குறிக்கோள். பெண்களின் கல்வித் தகுதியை உயர்த்துவது, அதன்மூலம் அவர்களை அறிவார்ந்த, தொழில்நுட்பம் நிறைந்த சமூகமாக மாற்றுவது.

இதன் முக்கிய நோக்கங்கள்:

பொருளாதார உதவி: அரசுப் பள்ளிகளில் பயின்றமாணவிகள் உயர்கல்வியைத் தொடர மாதந்தோறும் ₹1,000 உதவித்தொகையாக வழங்குவதன்மூலம், அவர்களின் கல்விச் செலவுகளைக் குறைப்பது.

பள்ளி இடைநிற்றலைத் தடுத்தல்: 6 முதல் 12ஆம் வகுப்புவரை அரசுப் பள்ளியில் பயின்ற மாணவிகள், வறுமை காரணமாகப் படிப்பை நிறுத்திவிடாமல், உயர்கல்விக்குச் செல்வதை உறுதிசெய்வது.

பெண் கல்வியை ஊக்குவித்தல்: இத்திட்டம், உயர்கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, பெண்குழந்தைகள் தங்கள் விருப்பப்படி படிப்பைத் தொடர ஊக்குவிக்கிறது.

குழந்தைத் திருமணத்தைத் தடுத்தல்: உயர்கல்விக்கு நிதியுதவி கிடைப்பதன்மூலம், குழந்தைத் திருமணங்கள் பெருமளவு குறைய வாய்ப்புள்ளது.

சமூகப் பாதுகாப்பு: பெண்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையை உயர்த்துவதன் மூலம், அவர்கள் அனைத்துத் துறைகளிலும் பங்கேற்க வழிவகைசெய்கிறது.

திட்டத்தின் தாக்கமும் சாதனையும்:

‘புதுமைப்பெண்’ திட்டம், தமிழ்நாட்டில் பெண் கல்வியில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது.

உயர்கல்வி சேர்க்கை உயர்வு: இத்திட்டத்தால் தமிழ்நாட்டில் பெண்களின் உயர்கல்வி சேர்க்கை 34 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

பயனாளிகள்: இத்திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான மாணவிகள் பயன்பெற்றுள்ளனர். 2023ஆம் ஆண்டு இறுதிக்குள், 2,30,820 மாணவிகள் பயனடைந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. பயனாளிகளில் பெரும்பாலானோர் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகள், பட்டியலினச் சாதிகள், பட்டியலினப் பழங்குடியினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்தவர்கள் என்பது இத்திட்டத்தின் சமூக நீதிக்கொள்கையைப் பிரதிபலிக்கிறது.

கல்வித் தரம்: இந்த நிதியுதவி,ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள், குறிப்பாகப் பொறியியல் போன்ற படிப்புகளைத் தொடர உதவுகிறது. சமூகரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் பின்தங்கிய மாணவிகளை ஊக்குவித்து, பாலின சமத்துவத்தை அடைவதற்கான ஒரு முக்கியமான படியாக இத்திட்டம் உள்ளது.

மகளிர் விடியல் பயணம்: பெண்களின் சுதந்திரத்திற்கும் மேம்பாட்டிற்குமான திட்டம் தற்போதைய தமிழக அரசால் தொடங்கப்பட்ட மிக முக்கியமான திட்டங்களில் ஒன்று, ‘மகளிர் விடியல் பயணம்‘ என்று பரவலாக அழைக்கப்படும் மகளிர் இலவசப் பயணத்திட்டம். இத்திட்டம், பெண்களின் பொருளாதாரச் சுமையைக் குறைத்து, அவர்களின் சமூகப் பங்கேற்பையும் சுதந்திரத்தையும் அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பெண்களும், திருநங்கையரும், அரசு நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம்.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சமூக மாற்றம் நோக்கிய 75 ஆண்டுக்காலப் பயணம்!

திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்:

பொருளாதார விடுதலை: தினசரிப் பயணம், குறிப்பாக, குறைந்த வருவாய் ஈட்டும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு ஒரு பெரிய நிதிச் சுமையாகும். இத்திட்டம், அந்தச் சுமையைப் பெருமளவில் குறைத்து, சேமிப்பிற்கு வழிவகுக்கிறது.

தடையற்ற இயக்கம்: பயணச்செலவு இல்லாததால், கிராமப்புற மற்றும் நகர்ப்புறப் பெண்கள் வேலைவாய்ப்பு தேடல், கல்வி, மருத்துவ சிகிச்சை, குடும்பப்பொறுப்புகள் எனப் பல்வேறு காரணங்களுக்காகத் தயக்கமின்றிப் பயணிக்க உதவுகிறது.

வேலைவாய்ப்புப் பங்கேற்பு: பல பெண்கள், பயணச்செலவு காரணமாகச் சில வேலைகளைத் தவிர்த்துவந்தனர். இத்திட்டம், அவர்களை வேலைவாய்ப்புகளில் அதிக அளவில் பங்கேற்க ஊக்குவிக்கிறது. இது, தமிழகத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்கிறது. குறிப்பாக, கிராமப்புறத்தில் இதன் தாக்கம் அதிகமாக உணரப்படுகிறது.

சமூகப் பாதுகாப்பு, சமத்துவம்: அனைத்துப் பெண்களுக்கும் இலவசப் பயணம் வழங்குவதன்மூலம், பாலின சமத்துவம் உறுதி செய்யப்படுகிறது. மேலும், குடும்பத்தில் செலவுசெய்யும் முடிவுகளில் அவர்களின் பங்களிப்பை இது அதிகரிக்கிறது.

பெண்களின் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம்:

பொருளாதார சுயச்சார்பு: தினசரி சராசரியாக 20 முதல் 30 ரூபாய் வரை பயணச் செலவு செய்யும் ஒரு பெண், மாதத்திற்கு ₹600 முதல் ₹900 வரை சேமிக்க முடியும். இந்தச் சேமிப்பு, குடும்பத்தின் மற்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு உதவுகிறது.

பணியிடப் பங்கேற்பு: இத்திட்டத்தின் காரணமாக, பல தினக்கூலிப் பணியாளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், சிறு வியாபாரிகள் மற்றும் முறைசாரா தொழிலாளர்கள் தங்கள் வருமானத்தை அதிகரிக்க முடிந்தது.

உயர்கல்வி மற்றும் ஆரோக்கியம்: கிராமப்புறங்களிலிருந்து உயர்கல்விக்குச் செல்லும் மாணவிகள், மருத்துவப் பரிசோதனைகளுக்காகப் பயணிக்கும் கிராமப்புறப் பெண்கள் இந்தத் திட்டத்தால் பெரிதும் பயனடைந்துள்ளனர்.

இந்தத் திட்டம் வெறும் இலவசப் போக்குவரத்துச் சேவையாக அல்லாமல், சமூகத்தில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்கவும், அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கான ஒரு முக்கியக் கொள்கையாகவும் பார்க்கப்படுகிறது. உள்கட்டமைப்பு குறைவாகவும் சமூகக் கட்டுப்பாடுகள் அதிகமாகவும் உள்ள கிராமப்புறங்களில் இது, பெண்களைப் பொருளாதார நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்கேற்கும் சக்திகளாக மாற்றியுள்ளது.

சமூகப் பாதுகாப்பு, சுகாதரம், அரசியல் பிரதிநிதித்துவம், பெண்களின் ஆரோக்கியத்திலும் சமூகப் பாதுகாப்பிலும் தி.மு.க. அரசு சிறப்புக் கவனம் செலுத்திவருகிறது.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சமூக மாற்றம் நோக்கிய 75 ஆண்டுக்காலப் பயணம்!

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்தும் நிதி உதவியும் வழங்கும் திட்டம் ஆகியவை மூலம் தாய், சேய் இறப்பு விகிதத்தைக் குறைப்பதில் தி.மு.க. அரசு பெரும்பங்காற்றியுள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, கர்ப்பிணிப்பெண்கள் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை, அவர்களின் ஆரோக்கியம் கண்காணிக்கப்படுவதை உறுதிசெய்கிறது.

அரசியல் பிரதிநிதித்துவம் என்பது பெண்களுக்கு அதிகாரத்தை வழங்குவதில் ஒரு முக்கியப் படியாகும். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கியதன் மூலம், கிராமப்புறப் பெண்கள் முதல் முறையாகப் பஞ்சாயத்துத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் போன்ற பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இது, கிராமப்புறப் பெண்களுக்குத் தங்கள் கிராமங்களின் வளர்ச்சி குறித்து நேரடியாக முடிவெடுக்கும் அதிகாரத்தை வழங்கியது. உள்ளூர் நீர் மேலாண்மை, சுகாதாரம், சாலை வசதி போன்ற பிரச்சினைகளைத் தீர்க்க அவர்கள் நேரடியாகச் செயல்படும் வாய்ப்பு கிடைத்தது. இந்த அரசியல் அதிகாரம், கிராமப்புறப் பெண்களின் சமூக நிலையை உயர்த்தியதுடன், ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் புதிய தலைமைத்துவத்தை உருவாக்கியது.

தி.மு.க.வின் 75 ஆண்டுக்காலப் பயணம், தமிழகப் பெண்களை சமூக மாற்றத்தின் ஆற்றல்மிகு தூண்களாக மாற்றியுள்ளது. சொத்துரிமையில் சமபங்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு, சுயஉதவிக் குழுக்கள் மூலம் பொருளாதாரத் தன்னிறைவு, நேரடி நிதியுதவி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் அரசியல் பிரதிநிதித்துவம் எனப் பல்வேறு தளங்களில் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள், கிராமப்புறப் பெண்களை வெறும் பயனாளி நிலையில் இருந்து, முடிவெடுக்கும் நிலையில் உள்ளவர்களாக மாற்றியமைத்துள்ளன.

திராவிட இயக்கத்தின் சமூக நீதிக் கொள்கைகள், இந்தியாவின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழகத்தின் கிராமப்புறப் பெண்களை மிகவும் முன்னேறிய மற்றும் வலுவான சமூகங்களாக மாற்றியுள்ளன. இது, தி.மு.க.வின் மிக முக்கியமான பங்களிப்பாகும். இதன்மூலம், கிராமப்புறப் பெண்கள் தங்கள் வாழ்க்கையைத் தாங்களே வடிவமைக்க முடியும் என்பதை உணர்ந்துள்ளனர். இது, உண்மையான சமூக மாற்றத்திற்கான அடிப்படை ஆற்றலாக விளங்குகிறது.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சுயமரியாதைத் திருமணம் வரலாறும் தி.மு.க.வின் தனித்துவமும்!

MUST READ