திருவண்ணாமலை மாநகர் அரசு மாதிரி பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவ – மாணவிகளுடன் கலந்துரையாடினார்.


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திருவண்ணாமலை மாவட்ட அரசு விழாவில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் திருவண்ணாமலை மாநகரில் 56 கோடியே 47 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மாதிரி பள்ளிக் கட்டடம் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கான விடுதிகளை திறந்து வைத்தார். தொடர்ந்து,
திருவண்ணாமலை மாநகர் அரசுப் பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு
பயிலும் மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளியில் மாணவர்களுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள்
குறித்தும், அவர்களது தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

அப்போது, பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி ஸ்ரீநிஷா, நவம்பர் 27 – 30 வரை
திரிபுரா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய செஸ் சாம்பியன் போட்டியில் கலந்து
கொண்டு மூன்றாம் இடம் பெற்றதற்காக வழங்கப்பட்ட பதக்கம் மற்றும் சான்றிதழை
முதலமைச்சரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

இந்நிகழ்வின்போது, பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ. வேலு, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட
ஆட்சியர் தர்ப்பகராஜ் உள்ளிட்டார் உடனிருந்தனர்.


