கடந்த டிசம்பர் மாதம் இண்டிகோ விமான சேவைகள் பாதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அந்த நிறுவனத்திற்கு ரூ.22 கோடி அபராதம் விதித்து, சிவில் விமான போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.


கடந்த டிசம்பர் மாதம் 3 மற்றும் 5ஆம் தேதிகளில் நாடு முழுவதும் இண்டிகோ விமான நிறுவன சேவைகள் பாதிக்கப்பட்டது. அந்நிறுவனத்தின் 2 ஆயித்து 507 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், 1852 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதன் காரணமாக 3 லட்சத்திற்கும் மேற்பட்ட விமான பயணிகள் பாதிக்கப்பட்டனர். இண்டிகோ விமான சேவை பாதிப்புக்கான காரணங்களை கண்டறிய 4 நபர்களை கொண்ட குழுவை அமைத்து சிவில் விமான போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த விசாரணை அடிப்படையில் இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ.22 கோடியே 20 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அபராதத்தில், விமானப் போக்குவரத்துத் தேவைகளின் பல விதிமீறல்களுக்காக விதிக்கப்பட்ட ரூ.1.80 கோடி ஒருமுறை அபராதமும், கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி முதல் நடப்பு ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி வரையிலான 68 நாட்களுக்குத் தினசரி ரூ.30 லட்சம் அபராதமும் அடங்கும். இது மொத்தமாக ரூ.20.40 கோடி அபராதத் தொகையாகும். இண்டிகோ நிறுவனத்தின் செயல்பாட்டுக் கோளாறுகளுக்கு முக்கியக் காரணங்களாக, செயல்பாடுகளைத் தேவைக்கு அதிகமாக மேம்படுத்தியது, போதுமான ஒழுங்குமுறைத் தயார்நிலை இல்லாதது, மேலாண்மை அமைப்பு மற்றும் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டில் உள்ள குறைபாடுகள் ஆகியவற்றை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு கண்டறிந்தது.

மேலும், விமான நிறுவனத்தின் மேலாண்மை, திட்டமிடல் குறைபாடுகளைப் போதுமான அளவு கண்டறியத் தவறியது, போதுமான செயல்பாட்டு இருப்பு நிலையைப் பராமரிக்கத் தவறியது மற்றும் திருத்தப்பட்ட விமானப் பணி நேர வரம்பு (FDTL) விதைகளைத் திறம்படச் செயல்படுத்தத் தவறியது என்று அக்குழு குறிப்பிட்டது. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின்படி, பணியாளர்கள், விமானங்கள் மற்றும் நெட்வொர்க் வளங்களின் பயன்பாட்டை அதிகப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்பட்டதாகவும், இது பணி அட்டவணைக்கான இருப்புநிலையை கணிசமாகக் குறைத்ததாகவும் அந்த விசாரணை மேலும் குறிப்பிட்டது. இந்த அணுகுமுறை பணி அட்டவணையின் ஒருமைப்பாட்டைப் பாதித்தது என்றும், செயல்பாட்டுத் தாங்குதிறனைப் பாதகமாக பாதித்தது என்றும் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.


