சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட உடன், என்டிஏவில் இடம்பெற்ற அனைத்துக்கட்சிகளும் கூட்டணிக்கு வந்துவிடுவார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.


என்டிஏ கூட்டணிக்குள் டிடிவி தினகரன் வந்துள்ளது குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- என்டிஏ கூட்டணியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இணைந்துள்ளார். கடந்த மக்களவை தேர்தலில் தினகரன் தனித்து போட்டியிட்டதால் பல தொகுதிகளில் அதிமுக தோற்றுவிட்டதாக சொன்னார்கள். தற்போது என்டிஏ கூட்டணியில் தினகரன் இணைந்ததால் இழந்த வாக்குகள் எடப்பாடிக்கு மீண்டும் வந்துவிடுமா? என்கிற கேள்வி எழும். ஆனால், கடந்த முறை கவுண்டர் கட்சியான அதிமுகவை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதற்காக தான் தினகரனுக்கு வாக்களித்தனர். தற்போது எடப்பாடி பழனிசாமியுடன் போய் கூட்டணி சேர்ந்துள்ளதால், முக்குலத்தோர் மக்கள் தினகரனுக்கு வாக்களிக்க மாட்டார்கள். பாஜக எம்எல்ஏ எடப்பாடி பழனிசாமி வீட்டில் சாப்பிடும் நிகழ்வை வருங்கால முதலமைச்சர் வீட்டில் சாப்பிட போவதாக சொல்கிறார். கடந்த 2024 மக்களவை தேர்தலின் போது அவர் வீட்டில் விருந்து சாப்பிட்டு தான் 40 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தனர். வானதி சீனிவாசனே இம்முறை தேர்தலில் வெற்றி பெறுவார்களா? என்பது சந்தேகம் தான்.

என்டிஏ கூட்டணியில் தற்போது தினகரன், அன்புமணி, ஜி.கே.வாசன் போன்றவர்கள் இணைந்துள்ளனர். ஆனால் ஓபிஎஸ் இன்னும் கூட்டணியில் இணையவில்லை. அவரும் என்டிஏ கூட்டணிக்குள் தான் இருக்கிறார். அவரை பொருத்தவரை மோடி பிரதமர் ஆனால் போதும். அவர்களே பார்த்து எதாவது கொடுத்தால், பெற்றுக்கொள்வார். ஓபிஎஸ் மீதும், அவருடைய மகன் மீதும் வழக்குகள் உள்ளன. அந்த வழக்கில் இருந்து காப்பாற்றிய நன்றிக்கடனுக்காக ஓபிஎஸ், என்டிஏ கூட்டணியில் இணைவார். 2026 சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், அந்த கூட்டணியில் இடம்பெற்றிருந்த ஓபிஎஸ் உள்ளிட்ட அனைவரும் வந்துவிடுவார்கள். அதற்கு பிப்ரவரி மாதம் வரை கால அவகாசம் உள்ளது. எடப்பாடி முதலமைச்சர் ஆக வாக்களியுங்கள் என்று ஓபிஎஸ் பிரச்சாரம் செய்வார். காரணம் அரசியலில் மானம், அவமானம் என்பது கிடையாது. கொடநாடு பங்களாவில் புகுந்து ஆவணங்களை திருடிச்சென்றபோது, எடப்பாடி பழனிசாமியை டிடிவி தினகரன் பங்காளி என்று சொல்கிறார்.

எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவதாக கூறி அமமுகவை தொடங்கியவர் தான் தினகரன். ஆனால் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்றவர்கள் பிரச்சாரம் செய்வார்கள். ஆனால் அவருக்கு உள்ளுக்குள் இருக்கும் வன்மம் போகாது. தற்போதும் தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பதாக மட்டுமே சொல்கிறார். எடப்பாடியை முதலமைச்சர் ஆக்க உழைப்போம் என்று அவர் சொல்லவில்லை. இருந்தபோதும் டிடிவி தினகரன் இணைந்துள்ளதால் முக்குலத்தோரின் வாக்குகள் வரும் என்று பாஜகவினர் நம்புகிறார்கள். பிரதமர் மோடி தமிழகம் வரும்போது எடப்பாடி, டிடிவி, ஓபிஎஸ் என எல்லோரையும் ஒரே மேடையில் ஏற்றுவார்கள். கடந்த 2024 மக்களவை தேர்தலின்போதும் தமிழ்நாட்டில் இருந்து பல கட்சிகளின் தலைவர்களை டெல்லிக்கு அழைத்துச்சென்றனர். ஆனால் கடைசியில் என்ன நடந்து என்று தெரியும்.

மருத்துவர் ராமதாஸ், விஜயுடன் கூட்டணி செல்லலாம் என யோசித்திருக்கிறார். ஆனால் விஜய் தரப்பில் சரியான முறையில் எதிர்வினை ஆற்றவில்லை. எனவே காத்திருக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர். அதேவேளையில் திமுக உடன் கூட்டணி வைக்க அதிக இடங்களை எதிர்பார்க்கிறார்கள். அன்புமணிக்கு வழங்கியதை விட ஓரிடம் கூடுதலாக தர வேண்டும் என்று மருத்துவர் தரப்பில் பேசப்படுகிறது. ஆனால் திமுக அவ்வளவு இடங்களை தர தயாராக இல்லை. அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் போன்றவர்கள் மீதான வழக்குகள் தற்போது விசாரணைக்கு வந்த நிலையில் தான், அவர்கள் உடனடியாக என்டிஏ கூட்டணியில் இணைந்தார்கள். டிடிவி தினகரனை கூட்டணிக்குள் கொண்டு வந்ததில், எடப்பாடி பழனிசாமிக்கும் சம்மதம் தான். இல்லாவிட்டால் அவர் சிறைக்கு செல்ல நேரிடும். என்டிஏ கூட்டணிக்குள் டிடிவி தினகரனை கொண்டு வந்ததன் மூலம் பாஜகவில் அண்ணாமலையின் கைகள் ஓங்குகிறது. அடுத்து ஓபிஎஸ்-யும் கூட்டணிக்குள் கொண்டுவந்துவிடுவார். தேர்தல் நேரத்தில் அவர்தான் அனைத்துப் பணிகளையும் பார்க்க உள்ளதாக திட்டமிட்டிருக்கிறர்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.
