எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் கூட்டணி சேர்ந்துள்ளது வரவேற்கத் தக்கது என்றும், இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.


இந்த விவகாரம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- டிடிவி தினகரன் – எடப்பாடி பழனிசாமி கூட்டணி இணைந்துள்ள நிலையில், இது எடுபடுமா? என்று கேள்வி எழுகிறது. இருவரும் கூட்டணியே சேர மாட்டோம் என்று சொல்லி வந்த நிலையில், அவர்கள் கூட்டணி சேர்கிற இடத்திற்கு காலம் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது. காலம் தான் பாஜகவை எடப்பாடியையும், தினகரனையும் சேர்த்துள்ளது. இதையே தான் 6 மாதங்களுக்கு முன்பு பாஜக செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தேன். அப்போதுதான் கூட்டணி ஜெல் ஆக முடியும். ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுக அரசியலை ஆட்டுவிப்பது பாஜக தான். அதற்கு காரணம் அதிமுகவை சேர்ந்த சில தலைவர்கள் தான். ஓபிஎஸ் தொடங்கி வைத்தார். எடப்பாடி பழனிசாமி அதை வளர்த்தார். தினகரன் வரைக்கும் அது தொடர்கிறது. பாஜகவினர் மிரட்டியோ, உருட்டியோ நாங்கள் சொல்வதை கேளுங்கள் என்கிற இடத்திற்கு வந்துவிட்டனர். என்ன செய்தாவது பிரிந்தவர்கள் கூட வேண்டும். பிளவு பட்ட இயக்கங்கள் இணைய வேண்டும் என்பதுதான் என்னுடைய பார்வையாகும் .

எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் போன்றவர்கள் மீது உள்ள வழக்குகளை காட்டி அவர்களை கூட்டணியில் இணைத்துள்ளார்கள் என்றால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். முதல் தளத்தில் தாயாளு அம்மாளை உட்கார வைத்து விசாரணை நடத்திக் கொண்டே, மேல் தளத்தில் காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடத்தினார்கள். காங்கிரஸ் ஆட்சியில் திமுகவை அந்த பாடு படுத்தினார்கள். அதே அறிவாலயத்தில் மேடை அமைத்து ராகுல் தான் இந்தியாவின் அடுத்த பிரதமர் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார். பழசை பேசினால் எந்த அணியும் அமையாது. அமைக்க முடியாது. தேர்தல் அரசியலில் ரோஷம் வெட்கம் எல்லாம் கிடையாது. தினகரன், எடப்பாடி சேர்ந்ததால் சில நிர்வாகிகளுக்கு வேண்டும் என்றால் வருத்தம் இருக்கலாம். ஆனால் கீழ்மட்ட தொண்டர்கள் மகிழ்ச்சியாக தான் இருப்பார்கள். 2021 சட்டமன்றத் தேர்தலில் நடைபெற்ற கசப்பான அனுபவம் நினைவுக்கு வந்ததால்தான் தினகரனும் விட்டுக்கொடுத்தவர்கள் கெட்டுப்போவது இல்லை என்று சொன்னார். அதேபோல எடப்பாடி பழனிசாமியும் அன்போடு வரவேற்பதாக சொன்னார். இதனை நகைப்புடன் பார்க்க வேண்டிய அவசியமில்லை.

மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று சொல்கிறார். பாஜக மதவாத அரசியலை தான் கையில் எடுப்பார்கள். அந்த சாயல் அதிமுக மீதும் விழும். அதை சமாளிக்கும் திறமை எடப்பாடி பழனிசாமிக்கும், தினகரனுக்கும் உள்ளதா? என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். மக்களுக்கு அதிமுக குறித்தும், பாஜக குறித்தும் மக்களுக்கும் ஒரு தனிப்பட்ட பார்வை இருக்கும். அதேவேளையில், அதிமுக – பாஜக கூட்டணியால் மதவாத அரசியல் என்று தாக்கத்தை ஏற்படுத்தாது. திமுக, அதிமுக கூட்டணிக்கு மாற்றாக விஜய் வருவார் என்று எதிர்பார்ப்பு நிலவியபோதும், அவர்கள் அந்த பிரச்சாரத்தை முன்னெடுத்து செல்லவில்லை. காரணம் அதற்கான சூழ்நிலை இன்னும் வரவில்லை. விஜய் இன்னும் அவருடைய கட்சி அரசியலையே செய்யவில்லை. ஜனநாயகன் படத்தை பற்றியே அவர் இன்னும் பேச மறுக்கிறார். அவரிடம் அரசியல் முதிர்ச்சியும் தெரியாதபோது, அவரை நம்பி எப்படி போவார்கள்? வைத்திலிங்கம் தவெகவில் இணைவதற்கும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. அப்படி இருக்கையில் அவர் திமுகவில் இணைந்தது ஏன்?

செங்கோட்டையனையே மதிக்கிற இடத்தில் அவர்கள் வைக்காதபோது மற்றவர்களுக்கும் பயம் இருக்குமல்லவா? பலருக்கும் அந்த பயம் இருக்கும். வேறு வழியில்லாமல் தான் அங்கு செல்வார்கள்.ஆனால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று சொல்லியும் யாரும் வராததற்கு காரணம் என்ன? என்று விஜய் யோசிக்க வேண்டும். காங்கிரஸ் விஜயிடம் சென்றால் அதிக இடங்கள் தருவார்கள். அதிக வாக்குகளை பெறலாம். ஆனால் 7 இடங்களிலாவது காங்கிரஸ் வெற்றி பெற முடியுமா? என்று யோசிக்க வேண்டும். அதையும் சேர்த்துதான் ஒரு கட்சி கணக்கு போடுவார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.
