தமிழக வெற்றிக்கழகம் கட்சி தலைவர் விஜய், என்டிடிவி ஆங்கில ஊடக மூத்த செய்தியாளர்களை சந்தித்து நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-


கேள்வி: நீங்கள் இதுவரை தேசிய ஊடகங்களுடன் உரையாடியதே இல்லை. இப்போது மட்டும் ஏன்?
விஜய்: ஆமாம், தேசிய ஊடகங்களுடனான எனது முதல் உரையாடல் இதுதான். இதை ஒரு வகையான ‘மாதிரி நேர்காணல்’ (Mock Interview) என்றுதான் நான் கூறுவேன். நான் போதுமான அளவு பேசுவதில்லை என்று மக்கள் கருதுகிறார்கள் என்பது எனக்குத் தெரியும், ஆனால் நான் எனது உரைகள் (Speeches) மூலமாகப் பேசுகிறேன். நான் எப்போதும் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன்.
கேள்வி: நீங்கள் ஒரு கிங்மேக்கரா (Kingmaker)?
விஜய்: நான் எதிர்காலத்திற்காகப் போராடுகிறேன், வெற்றி பெறவே போராடுகிறேன். ஏன் கிங் மேக்கர் என்று நினைக்கிறீர்கள்? எனது முன்மாதிரிகள் எம்ஜிஆர், ஜெயலலிதா, கலைஞர் மற்றும் ஷாருக்கான்.
கேள்வி: நீங்கள் நேரடியாகப் பதிலளிக்கத் தயங்குகிறீர்கள் அல்லது தன்னம்பிக்கை குறைவாக இருக்கிறீர்கள் என்று பலர் கருதுகிறார்கள். அதற்கு உங்கள் பதில் என்ன?
விஜய்: அது உண்மை என்று நான் நினைக்கவில்லை. இன்று அனைத்துக் கேள்விகளுக்கும் நான் நிதானமாகவும் தெளிவாகவும் பதிலளித்தேன். நான் ஏன் இங்கு இருக்கிறேன் என்பதில் எனக்கு எந்தக் குழப்பமும் இல்லை. நான் ஒரு முடிவெடுத்துவிட்டேன். நான் சினிமாவை விட்டுவிட்டேன். இதுதான் (அரசியல்) எனது எதிர்காலம்.

அரசியல் வருகை: கோவிட் காலத்திற்குப் பிறகு நான் அரசியலில் ஈடுபடுவது குறித்து மிகவும் தீவிரமாகச் சிந்தித்து வருகிறேன். இது திடீரென எடுத்த முடிவு அல்ல. இப்போது என் கவனம் மக்கள் பிரச்சினைகள் மீது உள்ளது.
ஜன நாயகன் திரைப்பட விவகாரம்: எனது அரசியல் வருகையால் ‘ஜன நாயகன்’ திரைப்படம் பாதிக்கப்பட்டுள்ளதற்காக எனது தயாரிப்பாளருக்காக நான் வருத்தப்படுகிறேன். அரசியலால் திரைப்படங்கள் பாதிக்கப்படலாம் என்பதை நான் எதிர்பார்த்தேன், அதற்காக மனதளவிலும் தயாராக இருந்தேன், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


