spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரை"பேரறிஞர் அண்ணா : மொழி, நிலம், அடையாளத்தின் அரசியல் "

“பேரறிஞர் அண்ணா : மொழி, நிலம், அடையாளத்தின் அரசியல் “

-

- Advertisement -

”ஒரு மொழியின் நிலத்தை இன்னொரு மொழி அபகரிக்கக் கூடாது” என்ற அவரது ஒரே வரி, அண்ணாவின் அரசியல் அறத்தையும் தொலைநோக்கையும் வெளிப்படுத்துகிறது."பேரறிஞர் அண்ணா : மொழி, நிலம், அடையாளத்தின் அரசியல் "

பேரறிஞர் அண்ணாவின் 57-வது ஆண்டு நினைவஞ்சலி, ஒரு தலைவரின் மறைவை மட்டும் நினைவுகூரும் நாளாக அல்ல; தமிழ்நாடு இன்று தமிழ்நாடாக உருவான வரலாற்றை திரும்பிப் பார்க்க வேண்டிய முக்கியமான அரசியல் நினைவுநாளாகக் கருதப்படுகிறது.

we-r-hiring

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டின் முன் எழுந்த மிகப்பெரிய சிக்கல்களில் மொழி, நிலம், அதிகாரம் ஆகியவை முக்கியமானவையாக இருந்தன. மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டுமா, வேண்டாமா என்ற கேள்வியில் நாடே குழம்பிய காலகட்டத்தில், தென்னிந்தியாவின் குரல் எப்படியிருக்க வேண்டும் என்பதை தெளிவாகவும் துணிச்சலாகவும் முன்வைத்தவர் பேரறிஞர் அண்ணா.

அண்ணா கேட்டது பிரிவினை அல்ல; அதிகாரப் பரவலாக்கம். அவர் வலியுறுத்தியது இனவாதம் அல்ல; மொழிவழி ஜனநாயகம்.

“மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும்; ஆனால் ஒரு மொழியின் நிலத்தை இன்னொரு மொழி அபகரிக்கக் கூடாது” என்ற அவரது ஒரே வரி, அண்ணாவின் அரசியல் அறத்தையும் தொலைநோக்கையும் வெளிப்படுத்துகிறது.

‘சென்னை யாருக்கு?’ என்ற கேள்வி எழுந்தபோது, உணர்ச்சியைத் தூண்டும் வன்முறையை அவர் தேர்வு செய்யவில்லை. எல்லைப் போராட்டங்களில் திமுக ஈடுபட்ட போதும், நியாயம், வரலாறு, மக்கள் விருப்பம் ஆகிய மூன்றையே அண்ணா அரசியல் ஆயுதமாகக் கொண்டார்.

திருத்தணி தமிழ்நாட்டுக்கே, திருப்பதி ஆந்திராவுக்கே என்ற தெளிவான முடிவு, அந்த அரசியல் தெளிவின் வெளிப்பாடாக அமைந்தது.

1956-ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் உருவானபோதும், “தமிழ்நாடு” என்ற பெயரை மத்திய அரசு ஏற்க மறுத்தது. தமிழர் அடையாளம் இரண்டாம் தரமாகப் பார்க்கப்பட்ட அந்த சூழலில், அதற்கு எதிராக உயிர் தந்த சங்கரலிங்கனாரின் கனவை, 1967-ஆம் ஆண்டு அரசியல் அதிகாரமாக மாற்றியவர் பேரறிஞர் அண்ணா.

“மெட்ராஸ் மாகாணம்” என்பதை “தமிழ்நாடு” என மாற்றிய தீர்மானம், ஒரு பெயர் மாற்றமாக மட்டும் அல்ல. அது மொழி அரசியல் சட்டமன்றத்திற்குள் நுழைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகக் கருதப்படுகிறது.

தமிழர்கள் தங்கள் நாட்டின் பெயரை தாங்களே முழங்கிய முதல் நாளாகவும் அது அமைந்தது. அண்ணாவின் பெருமை அவர் ஆட்சி செய்த காலத்துடன் முடிந்துவிடவில்லை.

இன்றும் மொழி உரிமை, மாநில சுயாட்சி, மத்திய–மாநில உறவுகள் குறித்து பேசப்படும் ஒவ்வொரு தருணத்திலும், அண்ணாவின் அரசியல் சிந்தனை உயிருடன் தொடர்கிறது.

மொழி என்பது வெறும் தொடர்புக் கருவி அல்ல; அது மக்களின் அரசியல் உரிமை என்பதை உணர்த்தி, அந்த உரிமையை சட்டமாகவும் அதிகாரமாகவும் மாற்றியவரே பேரறிஞர் அண்ணா.

அவருக்கு நினைவஞ்சலி செலுத்தும் சிறந்த வழி,
“தமிழ்நாடு வாழ்க” என்ற முழக்கத்தை அரசியல் விழிப்புணர்வோடும் உயிர்ப்போடும் தலைமுறைகள் தாண்டி காக்கும் செயலே ஆகும்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – பொதுவுடைமை குறித்த அறிஞர் அண்ணாவின் புரிதல்கள்!

MUST READ