சட்டமன்றத் தேர்தலில் அதிமுக நிறுத்தும் வேட்பாளர்களுக்கு எதிராக, சசிகலா – ஓபிஎஸ் வேட்பாளர்களை நிறுத்தி தங்களது பலத்தை நிரூபிக்க திட்டமிட்டுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.


ஓபிஎஸ்-ன் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- ஓபிஎஸ்-ஐ அதிமுகவில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்ட சூழலில் அவர் யாருடன் கூட்டணி சேருவார் என்கிற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. ஓபிஎஸ் முக்குலத்தோர் சமுதாயத்தில் பிறந்ததால் மட்டும் அந்த சமுதாயத்தின் தலைவராக ஆகிவிட முடியாது. அந்த சமுதாயத்திற்கு எதாவது செய்திருக்க வேண்டும். அப்படி செய்தவர் சசிகலா தான். அவருக்கு என்று ஒரு செல்வாக்கு உள்ளது. இவர்கள் இருவரும் அதிமுகவுக்குள் மீண்டும் நுழைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் அது நடப்பதற்கான வாய்ப்புகளே கிடையாது.
மன்னார்குடியை சேர்ந்த நண்பர்கள் சொல்கிறபோது சசிகலா, ஓபிஎஸ் ஆகியோர் இணைந்து அதிமுக வேட்பாளர்கள் நிற்கும் தொகுதிகளில் போட்டி வேட்பாளரை நிறுத்தி பலத்தை நிரூபிக்க திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள். இது பாஜகவுக்கும், அதிமுக தலைமைக்கும் தெரியும். ஆனால் அவர்கள் இருவருக்கும் இடமில்லை என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். அமமுகவே, இன்னும் அதிமுகவோடு இணையவில்லை. அமமுகவின் முதல் வேட்பாளர் சோளிங்கர் பார்த்திபன் என்று தினகரன் அறிவித்துள்ளார். ஆனால் பெரிய அளவில் பகைமை ஏற்பட்ட பிறகு, அவர்களுக்கு அதிமுகவினர் வேலை பார்க்க மாட்டார்கள். தற்போதே கூட்டங்களுக்கு அமமுக வருவதில்லை.

ஓபிஎஸ் எதிர்காலம் என்பது எதாவது ஒரு வகையில் பெரிய அளவில் போராட வேண்டும். என்னுடைய நண்பர் ஒருவர் சொன்னார், ஓபிஎஸ் – சசிகலா இணைந்து 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப் போகிறார்கள். பின்னர் தேர்தல் ஆணையத்திற்கு தங்களுக்கு இரட்டை இலை சின்னம் வழங்கக் கோரி மனு அளிக்க உள்ளனர். சிவில் வழக்கு நிலுவையில் உள்ளது. சசிகலா தான் இன்று வரை அதிமுகவின் பொதுச்செயலாளர். அது தொடர்பான தாவா தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளது என மனுவில் தெரிவிக்க உள்ளனர்.
ஒருவேளை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிட்டால் உச்சநீதிமன்றத்தை நாட திட்டமிட்டு உள்ளனர். அடுத்த 15 நாட்களுக்குள் இது நடக்க உள்ளதாக தெரிவித்தார். திவாகரன் வைத்திருந்த கட்சியை அண்ணா திராவிடர் கழகம் என்று மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அது டெல்டாவில் உள்ள முக்குலத்தோர் மக்களில் ஒரு பிரிவு, தென் மாவட்டங்களில் செம்பியம் மறவர்கள் மற்றும் ஓபிஎஸ்க்கு ராமநாதபுரத்தில் கொண்டையம்கோட்டை மறவர்கள ஆதரவு உள்ளது.

ஒபிஎஸ் ஆதரவாளர்களுக்கு தவெகவில் போய் இணைவதற்கு விருப்பம் கிடையாது. இந்த தேர்தலில் பலத்தை நிரூபித்தால் அடுத்த தேர்தலில் வாய்ப்பு வரும். தவெக, திமுகவில் போய் இணைந்தால் கட்சி கரைந்து போய்விடும். ஓபிஎஸ், சசிகலாவின் இந்த நடவடிக்கைகள் காரணமாக நயினார் நாகேந்திரன் தான் கலக்கம் அடைந்துள்ளார். ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட சமுதாயம் அவருக்கு எதிராக உள்ளது. பாஜக காங்கிரசை விட அதிகமாக வளர்ந்துள்ளனர். பாஜகவினர் 8 முதல் 10 சதவீதம் வாக்குகள் வாங்கியுள்ளனர். 234 தொகுதிகளிலும் காங்கிரசை விட பாஜக சராசரியாக வளர்ச்சி அடைந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் சுதா, ஜோதிமணிக்கு பிரச்சினை ஏற்படுகிறபோது, அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டியது திமுக. ஆனால் காங்கிரஸ், திமுக இடையே பிரச்சினை ஏற்படுகிறபோது அவர்கள் ஏன் ஆதரிக்க வேண்டும் என்று தயங்குகிறார்கள். தமிழ்நாட்டில் பல முனை போட்டியில் திமுக 200 இடங்களை வென்றால், 2029 தேர்தலிலும் தனித்து நிற்கத்தானே விரும்புவார்கள். ஜெயலலிதா 2014 தேர்தலில் தனித்து நின்று 37 இடங்களில் வென்றார். அடுத்து 2016 சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்டார். தற்போது திமுக 2026ல் பார்முலாவை உருவாக்கினால், அதே பார்முலாவை தான் 2029லும் செயல்படுத்துவார்கள்?

டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் அதிமுகவின் வாக்குகளை, சசிகலா – ஒபிஎஸ் கூட்டணி பெரிய அளவில் பிரிக்கும். அதேவேளையில் தவெகவும் குறிப்பிடத்தக்க அளவு அதிமுக வாக்குகளை பிரிக்கும். வட மாவட்டங்களில் தவெகவின் வாக்கு வங்கியில் பட்டியல் இனத்தவரின் வாக்குகள் அதிகமாக உள்ளது. அதன் காரணமாக மருத்துவர் ராமதாசை, தவெக கூட்டணியில் சேர்க்க தயக்கம் காட்டுகிறார்கள். எப்போதும் சினிமாவை எதிர்த்த ராமதாசுக்கும், விஜயுடன் சேருவதிலும் தயக்கம் இருக்கலாம். எனவே அவருக்கு இருக்கும் வாய்ப்பு தனித்து போட்டியிடுவது தான். அன்புமணி நிறுத்தும் வேட்பாளர்களை எதிர்த்து, வேட்பாளர்களை நிறுத்துவது தான் அவருக்கு உள்ள வாய்ப்பு. அது அதிமுகவை தான் பாதிக்கும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


