கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.294 கோடியில் 1,237 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
கன்னியாகுமரியில் ரூ.30 கோடியில் மினி டைடல் பூங்காவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், முதல்வருக்கு அய்யன் திருவள்ளுவர் சிலை நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “கன்னியாகுமரி தனித்துவமான மாவட்டம். எல்லை போராட்ட வீரர்கள் மார்ஷல் நேசமணி, கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை உள்ளிட்டோர் பிறந்த மண் குமரி. இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் தனித்துவமான மாவட்டம் கன்னியாகுமரி.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.4,260 கோடியில் 34 லட்சம் பேருக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.4,119 கோடியில் 11,690 வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீனவர்கள் நலனுக்காக இந்த அரசு எண்ணற்றத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை ரூ.8,000ஆக உயர்த்தி வழங்கியுள்ளது திராவிட மாடல் அரசு. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 7 பாலங்கள் கட்டியுள்ளோம். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.
கன்னியாகுமரியில் 5.28.20 மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.
கன்னியாகுமரியில் 25 கோடியில் புதிதாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்.
களியக்காவிளையில் ரூ.9 கோடி செலவில் சாலைகள் மேம்படுத்தப்படும்.
தூய மரியன்னை தேவாலயம் ரூ.2 கோடி செலவில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்.
குளச்சல் நகராட்சியில் ஏவிஎம் கால்வாய் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.
கன்னியாகுமரியின் வாணியக்குடியில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட இருக்கிறது. குளச்சல் மீன்பிடி துறைமுகம் விரிவாக்கத்துக்காக ரூ.105 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்று கூறினாா்.
மேலும், 14 வயதில் இருந்து அரசியலில் இருக்கிறேன். என்னுடைய சக்திக்கு மீறி நான் உங்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன். சிலர் தேர்தல் நேரத்தில் மட்டும் உங்களை வந்து வட்டமடிப்பார்கள். எவ்வளவு முறை பிரதமர் தமிழ்நாடு வருகிறாரோ அவ்வளவு வித்தியாசத்தில் என்டிஏ கூட்டணி தமிழ்நாட்டில் தோற்கும். குஜராத்தில் உள்ள மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. தமிழ்நாட்டில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் தரவில்லை. ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யவில்லை. பாஜக இருக்கும் மாநிலத்தில் வளர்ச்சி இருக்காது; வளர்ச்சி அடைந்த மாநிலமாக இருந்தால் அங்கு பாஜக இருக்காது. தமிழ்நாடு செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து ஆளப்பட வேண்டும். டெல்லியில் இருந்து ஆளப்படக்கூடாது.
தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக வாழ்கிறார்கள். வரலாற்றில் இல்லாத எண்ணிக்கையாக 4000 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்துள்ளோம். தமிழ்நாட்டு மீனவர்களை காக்க பிரதமர் எடுத்த நடவடிக்கை என்ன? வெளியுறவுத்துறை, கடற்படை யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது? பழனிசாமி வாய்க்கு வந்தபடி வெரைட்டி வெரைட்டியாக வடை சுடுகிறார். தேர்தலை காரணம் காட்டி மகளிர் உரிமைத் தொகையை 3 மாதம் நிறுத்தலாம் என்று சூழ்ச்சி செய்தனர். இதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு ரூ.5,000 வழங்கினோம். ஆரம்பத்தில் கிண்டலடித்தவர்கள் இப்போது எங்களால்தான் மகளிருக்கு ரூ.5,000 கிடைத்தது என்கிறார்கள். நாம் செய்த செயலால் மக்களுக்கு மகிழ்ச்சி. பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம்தான்; ராஜ்ஜியம் கிடைக்காது” என முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் உரையாற்றினாா்.
நம் குரல் தமிழ்ச் சொந்தங்களுக்காகத் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும் – முதல்வர்


