அகமதாபாத்: இந்த மாத இறுதியில் தொடங்கும் ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் மேத்யூ ஹேடனைத் தனது அணியின் பேட்டிங் பயிற்சியாளராக குஜராத் டைட்டன்ஸ் அணி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உலகக் கோப்பை வென்ற வீரரும், மிகச்சிறந்த அதிரடி தொடக்க ஆட்டக்காரருமான ஹேடன், சர்வதேச கிரிக்கெட்டில் மிகுந்த அனுபவம் கொண்டவர். டி20 கிரிக்கெட்டின் நவீன நுணுக்கங்களையும், அதிரடி ஆட்ட முறைகளையும் நன்கு அறிந்த ஹேடன், குஜராத் அணியின் பயிற்சியாளர் குழுவில் இணைந்திருப்பது அந்த அணியை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு ஐபிஎல் சீசனைப் புதிய உத்வேகத்துடன் எதிர்கொள்ளத் தயாராகி வரும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு, இவரது வருகை ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குனர் விக்ரம் சோலங்கி கூறுகையில், “அணியின் பயணத்தில் இது ஒரு மிக முக்கியமான கட்டம் என்றும், கிரிக்கெட் கட்டமைப்பை மேம்படுத்தி நீண்ட கால வெற்றியை அடைவதே தங்களின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.

சர்வதேச அளவில் மேத்யூ ஹேடன் பெற்றுள்ள அபார அனுபவமும், இளம் வீரர்களை ஒரு சிறந்த வழிகாட்டியாக இருந்து செதுக்கும் அவரது திறமையும், வரும் காலங்களில் குஜராத் அணியின் பேட்டிங் அடையாளத்தை மாற்றியமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பேட்டிங் பயிற்சியாளராக நியமித்தது குறித்து பேசிய மேத்யூ ஹேடன், “சாதாரண பேட்டிங் எதிரணிக்கு அழுத்தம் கொடுக்கும். ஆனால் சிறந்த பேட்டிங் ஆட்டத்தையே தன்வசப்படுத்தும்; அத்தகைய உயரிய தரத்தை குஜராத் டைட்டன்ஸ் அணியில் நிலைநாட்டவே நான் விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.
வரலாற்று சாதனை: உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.131 கோடி பரிசு – பிசிசிஐ அதிரடி அறிவிப்பு!
