விஜயின் ”ஜனநாயகன்” திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை ரத்து செய்த அமேசான் நிறுவனம்.
நடிகர் விஜய் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள “ஜனநாயகன்” திரைப்படம் வெளியீட்டில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதால், அதன் டிஜிட்டல் உரிமை தொடர்பாக புதிய பரபரப்பு உருவாகியுள்ளது.
இந்தப் படத்தின் ஓடிடி (OTT) படத்தின் ஓடிடி உரிமைத் தொகையை ரூ. 120 கோடிக்கு வாங்கியுள்ளதாகக் கூறப்படும் அமேசான் ஃப்ரைம் நிறுவனம், ஒப்பந்தத்தை ரத்து செய்யும் முடிவுக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திட்டமிட்ட தேதியில் படம் வெளியாகாத காரணத்தால், அந்த தொகையில் பிற படங்களை வாங்க அமேசான் நிறுவனம் முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
“ஜனநாயகன்” திரைப்படம் முதலில் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் அதன் வெளியீடு தொடர்ந்து தள்ளிப்போய்க் கொண்டே வருகிறது. குறிப்பாக, படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் சில காட்சிகள் உள்ளதாக புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழலில், படக்குழு தணிக்கை சான்றிதழுக்காக உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களையும் நாடியது. பின்னர் வழக்கை திரும்பப்பெற்று, படத்தை மறுதணிக்கைக்காக அனுப்பிவைத்தது.
தற்போது மறுதணிக்கை குழு படத்தை பார்வையிட்டு சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல் இல்லாத நிலை நீடிக்கிறது.
இந்நிலையில் தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படக்கூடிய சூழல் இருப்பதால், படத்தின் வெளியீடு மேலும் தள்ளிப்போகும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, படத்தின் டிஜிட்டல் உரிமையை பெற்றிருந்ததாகக் கூறப்படும் அமேசான் நிறுவனம் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், படத்தின் வெளியீடு தாமதமாகிவருவதால் விநியோகஸ்தர்களும் தயாரிப்பு நிறுவனத்துக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
