பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞர் சங்கத் தலைவராகப் பணியாற்றி வந்த ஜி.கே.எம். தமிழ்க்குமரன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
பாமகவின் மூத்த தலைவரும், முன்னாள் தலைவருமான ஜி.கே. மணியின் மகன் ஜி.கே.எம். தமிழ்க்குமரன். கடந்த சில காலமாக பாமகவின் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் தலைமைப் பொறுப்பு தொடர்பான மோதல்கள் நிலவி வந்த சூழலில், தமிழ்க்குமரன் நேற்று (மார்ச் 28) சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை
தமிழ்க்குமரன் காங்கிரஸ் கட்சியில் இணைந்த சில மணி நேரங்களிலேயே, மருத்துவர் ராமதாஸ் இது தொடர்பான கண்டன அறிக்கையை வெளியிட்டார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:
“பாட்டாளி மக்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சியின் கண்ணியத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையிலும், மாற்றுக்கட்சியில் இணைந்து செயல்பட்டு வரும் ஜி.கே.எம். தமிழ்க்குமரன், இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார். அவருடன் பாட்டாளி சொந்தங்கள் யாரும் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது.” என அவர் அறிவித்துள்ளார்.
பாமகவின் தூணாகக் கருதப்படும் ஜி.கே. மணியின் மகன் அக்கட்சியை விட்டு வெளியேறியது பாட்டாளி சொந்தங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் ஜி.கே. மணி தரப்பினரிடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகளின் உச்சகட்டமாகவே இந்த விலகல் பார்க்கப்படுகிறது.
தமிழ்க்குமரனின் இந்த முடிவைத் தொடர்ந்து, பாமகவில் மேலும் சில நிர்வாகிகள் வெளியேற வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேசமயம், கட்சியின் கட்டுக்கோப்பைக் காக்க இத்தகைய நடவடிக்கைகள் அவசியம் என ராமதாஸ் தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
