வாக்காள பெருமக்களே உங்களது வாக்குசாவடிகளை கண்டறிய தேர்தல் ஆணையம் பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. மேலும், வாக்காளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தைக் கடைப்பிடித்து, பாதுகாப்பான முறையில் வாக்களிக்குமாறும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.


2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் 75,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்காளர்கள் தங்களுக்கான வாக்குச்சாவடி விவரங்களை எளிதாக அறிந்து கொண்டு சிரமமின்றி வாக்களிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.
இதற்காக, “Voter Helpline App”, electoralsearch.eci.gov.in இணையதளம் மற்றும் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம். EPIC எண் அல்லது பெயர் மற்றும் மாவட்ட விவரங்களை பதிவு செய்தால், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடி பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்கள் உடனடியாக கிடைக்கும்.
மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றில் மத்திய பாதுகாப்புப் படையான சிஆர்பிஎஃப் (CRPF) வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் சுமூகமான மற்றும் பாதுகாப்பான வாக்குப்பதிவு நடைபெற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வாக்காளர்களின் வசதிக்காக வாக்குச்சாவடிகளில் குடிநீர், கழிப்பறை, சாய்வுப்பாதைகள் (ramps), இருக்கைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) மூலம் வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி விவரங்கள் மற்றும் வாக்குச்சீட்டுகள் (Voter Slips) வழங்கப்பட்டு வருகின்றன. வாக்காளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் வந்து, ஒழுங்காகவும் பாதுகாப்பாகவும் வாக்களிக்க தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை, வாக்குச்சாவடிகளுக்குள் அலைபேசி, கேமரா, ஸ்மார்ட் வாட்ச் போன்ற மின்னணு சாதனங்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தேர்தல் நாளில் அனைவரும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
விடுமுறை அளிக்காவிட்டால் கடும் நடவடிக்கை – அர்ச்சனா பட்நாயக் எச்சரிக்கை
