திருமணம் செய்வதாக கூறி ரூ.9.35 கோடி மதிப்பிலான பணம் மற்றும் சொத்துகளை மோசடி செய்ததாக நடிகை ஆஷு ரெட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத் நகரின் ஷாக்ஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த யேனுமுலா சத்யநாராயணா என்பவர் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது மகனை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்த ஆஷு ரெட்டி, பின்னர் ஏமாற்றியதோடு, ரூ.9.35 கோடி மதிப்பிலான பணம், தங்க நகைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வாகனங்களை தனது பெயரில் பதிவு செய்து கொண்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த புகாரை தொடர்ந்து, குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், தன்னுக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை நடிகை ஆஷு ரெட்டி மறுத்துள்ளார். தனது எக்ஸ் தளபக்கத்தில் வெளியிட்ட பதிவில், தன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், தன் அனுமதியின்றி தவறான தகவல்கள் வெளியிடப்பட்டாலோ அல்லது அவதூறு பரப்பப்பட்டாலோ, அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
