Homeசெய்திகள்இந்தியா"ஜி ராம் ஜி" திட்டம் ஜூலை 1 முதல் அமல் – மத்திய அரசின் அதிகாரப்பூர்வ...

“ஜி ராம் ஜி” திட்டம் ஜூலை 1 முதல் அமல் – மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

-

- Advertisement -

125 நாட்கள் கட்டாய வேலை வாய்ப்பு திட்டமான “ஜி ராம் ஜி” திட்டம் நாடு முழுவதும் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது."ஜி ராம் ஜி" திட்டம் ஜூலை 1 முதல் அமல் – மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

நாடு முழுவதும் கிராமப்புற வேலைவாய்ப்பை விரிவுபடுத்தும் நோக்கில், 125 நாட்கள் கட்டாய வேலைவாய்ப்பு வழங்கும் புதிய திட்டமான “விக்சித் பாரத் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்கம்” ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு மாற்றாக கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய திட்டம், பல்வேறு மாற்றங்களுடன் செயல்படுத்தப்பட உள்ளது.

we-r-hiring

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 100 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், சமீபத்தில் “விக்சித் பாரத் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்கம்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இதனுடன், வேலைவாய்ப்பு உத்தரவாத காலம் 100 நாட்களிலிருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டது.

மேலும், புதிய திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மொத்த நிதியில் 40 சதவீதத்தை மாநில அரசுகள் ஏற்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கு பல்வேறு மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், திட்டம் திட்டமிட்டபடி ஜூலை 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரும் என இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிப்பின்படி, தகுதியான பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 125 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கப்படும். அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் நேரடியாக வங்கி கணக்குகள் அல்லது தபால் நிலைய வங்கி கணக்குகளுக்கு வரவு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊதியம் வாரந்தோறும் அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்படும். பணம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால், அதற்கான இழப்பீடும் சேர்த்து வழங்கப்படும் என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. 2026–2027 நிதியாண்டிற்காக இத்திட்டத்திற்கு மத்திய அரசு மட்டும் 95,692.31 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. மாநில அரசுகளின் 40 சதவீத பங்களிப்புடன், திட்டத்தின் மொத்த செலவு 1.51 லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், புதிய திட்டத்தின் கீழ் புதிய அடையாள அட்டைகள் வழங்கப்படும் வரை, பயனாளிகள் தற்போது பயன்படுத்தி வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட அடையாள அட்டைகளை தொடர்ந்தும் பயன்படுத்தலாம் என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய திட்டம், அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக முக்கிய கவனத்தை பெற்றுள்ளது.

இந்திய – வங்கதேச எல்லையில் 45 நாள்களில் வேலி – சுவேந்து அதிகாரி அதிரடி அறிவிப்பு

MUST READ