ஜோதிடருக்கு அரசுப்பதவி வழங்கிய தமிழக வெற்றிக் கழக அரசின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கடுமையாக விமர்சித்துள்ளது.
தமிழக அரசின் ஆலோசனைக் குழுவில் ஜோதிடர் ராதன் பண்டிட் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த நியமனத்தை கண்டித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கடுமையாக விமர்சித்துள்ளது.

அந்த அமைப்பின் மாநிலக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் இதற்கு முன் ஆட்சி செய்த அரசுகள் மூடநம்பிக்கையை ஒழிக்க தனிச்சட்டம் இயற்றவில்லை என்றாலும், மூடநம்பிக்கையை ஊக்குவிப்பவர்களை அரசின் ஆலோசனைக் குழுவிலோ அல்லது உயர்பதவிகளிலோ நேரடியாக நியமித்ததில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், முதலமைச்சரின் தனிப்பட்ட விருப்பம் மற்றும் நம்பிக்கைகள் அரசின் கொள்கை முடிவுகளில் பிரதிபலிக்கக் கூடாது என்றும், இது பகுத்தறிவு மரபைக் கொண்ட தமிழ்நாட்டின் அடிப்படை சிந்தனைக்கு எதிரான நடவடிக்கை என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனால் அரசின் மதச்சார்பின்மை மற்றும் அறிவியல் மனப்பான்மை குறித்து கேள்விகள் எழுந்துள்ளதாகவும், ஜோதிடரின் நியமனம் அரசின் நம்பகத்தன்மையை பாதிக்கும் வகையில் இருப்பதாகவும் தமுஎகச குற்றம்சாட்டியுள்ளது. எனவே, ஜோதிடர் ராதன் பண்டிட்டின் நியமனத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திமுக அரசின் திட்டங்கள் தவெக ஆட்சியிலும் தொடரும்: காதர் மொகிதீன் நம்பிக்கை
