தாய்மொழி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றால் மாணவர்கள் அறிவியல் அறிஞர்களாகவும் மேதைகளாகவும் உருவாக முடியும் என்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சென்னையின் கோட்டூர்புரத்தில் உள்ள பெரியார் தொழில்நுட்ப மையத்தில் இன்று நடைபெற்ற ‘அறிவியல் ஒளி’ மாத இதழின் 19-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அவர், சிறந்த கட்டுரைகள் எழுதிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், அறிவியல் கல்வி, மொழி அறிவு மற்றும் இளைஞர்களின் பங்களிப்பு குறித்து பல்வேறு கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசியதற்கு பின்னால் கடுமையான சுய முயற்சியும் பயிற்சியும் இருந்ததாக குறிப்பிட்ட பா.சிதம்பரம், ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் தன்னுடைய கருத்துகளை வெளிப்படுத்தும் திறனை அவர் வளர்த்துக்கொண்டதாகச் சொன்னார்.
மாணவர்கள் ஆங்கில மொழியை கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய அவர், உலகளவில் பெரும்பாலான அறிவியல் நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் ஆராய்ச்சி வெளியீடுகள் ஆங்கில மொழியில்தான் வெளிவருகின்றன என்றார். அறிவியலின் சமீபத்திய முன்னேற்றங்களை முழுமையாக அறிந்து கொள்ள ஆங்கில அறிவு அவசியம் என்றும் அவர் கூறினார். சீனம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது ஜெர்மன் போன்ற வெளிநாட்டு மொழிகளை பெரும்பாலான மக்கள் கற்றுக்கொள்வது சிரமமானதாக இருக்கலாம். ஆனால் பள்ளி மற்றும் கல்லூரி கல்வியில் ஏற்கனவே இடம்பிடித்துள்ள ஆங்கிலம், இந்தியர்களால் எளிதாகக் கற்றுக்கொள்ளக்கூடிய அந்நிய மொழியாக இருப்பதால் அதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
அதே நேரத்தில், தாய்மொழியின் முக்கியத்துவத்தை எந்த நிலையிலும் புறக்கணிக்கக் கூடாது என்றும் பா.சிதம்பரம் வலியுறுத்தினார். உலகின் பல்வேறு மேதைகள் மற்றும் அறிஞர்கள் தங்களது தாய்மொழியிலேயே அறிவாற்றலை வளர்த்துக்கொண்டு உயர்ந்த நிலையை அடைந்துள்ளனர் என்பதை சுட்டிக்காட்டிய அவர், தமிழ் உள்ளிட்ட தாய்மொழிகளின் வழியே சிந்திக்கும் திறன் வளர்க்கப்பட வேண்டும் என்றார். “தமிழ் நமது தாய்மொழி; ஆங்கிலம் அறிவைப் பெற உதவும் உலக மொழி.
இந்த இரு மொழிகளையும் கற்றுக்கொண்டு மாணவர்கள் அறிவியல் அறிஞர்களாகவும், ஆராய்ச்சியாளர்களாகவும், மேதைகளாகவும் உருவாக முடியும். அதற்காக தாழ்வு மனப்பான்மை அல்லது அச்சம் தேவையில்லை,” என்று அவர் தெரிவித்தார். அறிவியல் என்பது மிகவும் கடினமான ஒன்றல்ல என்றும், இயற்கையின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளும் ஒரு வழிமுறையே அறிவியல் என்றும் பா.சிதம்பரம் கூறினார். இதை விளக்கும் வகையில் ஒரு அறிவியல் மேதையின் கருத்தை மேற்கோள் காட்டிய அவர், “கணிதவியலாளர் தானே உருவாக்கிய விதிகளின் அடிப்படையில் விளையாடுகிறார்; ஆனால் இயற்பியலாளர் இயற்கை வழங்கிய விதிகளின் அடிப்படையில் செயல்படுகிறார்” என்ற கருத்தை எடுத்துரைத்தார்.
அறிவியல் சார்ந்த சமூகத்தை உருவாக்குவது என்பது மொழி, இலக்கியம், விளையாட்டு போன்ற துறைகளை புறக்கணிப்பது அல்ல என்றும் அவர் கூறினார். மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்தியாவில் ஒவ்வொரு தலைமுறையிலும் உருவாகும் லட்சக்கணக்கான இளைஞர்களில் குறைந்தபட்சம் 10 சதவீதமாவது அறிவியல் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்காக தங்களை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார். மாணவர்கள் அறிவியலின் மீது ஆர்வம் கொண்டு, தாய்மொழி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் திறமையை வளர்த்துக்கொண்டு நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் என பா.சிதம்பரம் வாழ்த்து தெரிவித்தார்.
தஷ்வந்த் விடுதலை தீர்ப்பை திருத்த கோரி உச்ச நீதிமன்றத்தை அணுக தமிழ்நாடு அரசு முடிவு
