கர்நாடகாவைச் சேர்ந்த ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இடையே நிலவும் நீண்டகால மோதலை தீர்க்க, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் மத்தியஸ்தராக நியமனமிக்கப்பட்டுள்ளாா்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்தூரி மற்றும் ஐபிஎஸ் அதிகாரி டி. ரூபா ஆகியோருக்கு இடையே நீண்டகாலமாக நீடித்து வரும் மோதலை சுமூகமாக தீர்க்கும் நோக்கில், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் கடந்த 2023-ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து குற்றச்சாட்டுகளை முன்வைத்த இரு அதிகாரிகளின் மோதல் பின்னர் அவதூறு வழக்காக நீதிமன்றத்தை எட்டியது. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பினருக்கும் இடையிலான கருத்து வேறுபாட்டை நீதிமன்றத்திற்கு வெளியே பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயற்சிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், “இருவரும் திறமையான மற்றும் சிறந்த அதிகாரிகள். ஆனால் இந்த மோதல் மற்றும் நீதிமன்ற வழக்குகள் அவர்களின் தொழில்முறை எதிர்காலத்தை பாதிக்கும் சூழலை உருவாக்குகின்றன. எனவே இருவரும் சுமூகமான தீர்வை நோக்கி நகர வேண்டும்” என்று அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, இரு அதிகாரிகளுக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகள் மூலம் நீண்டகாலமாக நீடித்து வரும் இந்த சர்ச்சைக்கு முடிவு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. கர்நாடக நிர்வாக வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்த இந்த விவகாரத்தில், நீதிமன்றத்தின் தலையீடு மற்றும் மத்தியஸ்தர் நியமனம் இரு அதிகாரிகளுக்கும் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆண்டுதோறும் 28,000 கோடியை இழக்கும் இந்தியர்கள் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்
