184 ஆண்டுகளாக ஆடவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக இயங்கி வந்த சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு, இந்தக் கல்வியாண்டு முதல் இருபாலரும் பயிலும் (Co-Education) கல்லூரி அந்தஸ்தை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.


சென்னையில் செயல்பட்டு வரும் 184 ஆண்டுகள் பழமை வாய்ந்த பச்சையப்பன் கல்லூரிக்கு தமிழ்நாடு அரசு இருபாலர் (Co-Educational) கல்லூரி அந்தஸ்து வழங்கியுள்ளது. இதன் மூலம், இதுவரை ஆடவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக இயங்கி வந்த இந்நிறுவனம், 2026-27 கல்வியாண்டு முதல் மாணவிகளையும் சேர்த்துக்கொள்ள உள்ளது.
தமிழ்நாட்டில் அரசு ஆடவர் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வரும் நிலையில், இருபாலர் கல்லூரிகளுக்கு மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருப்பதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
1842ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பச்சையப்பன் கல்லூரி, கல்வி மற்றும் சமூகப் பங்களிப்பில் முக்கிய இடம் வகித்து வருகிறது. அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன், ஈ.வி.கே. சம்பத், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆளுமைகள் இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்களாக உள்ளனர். கல்லூரி முதல்வர் பேபி குல்னாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இருபாலர் அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பது கல்லூரி வரலாற்றில் முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த மாற்றம் மாணவிகளுக்கும் தரமான உயர்கல்வி பெறும் வாய்ப்பை விரிவுபடுத்துவதோடு, பல்வகைமையும் சமத்துவமும் நிறைந்த கல்விச் சூழலை உருவாக்க உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசின் இந்த முடிவை கல்லூரி நிர்வாகம், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். இருபாலர் அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பது நிர்வாக ரீதியான மாற்றம் மட்டுமல்லாமல், கல்லூரியின் பாரம்பரியத்தை பாதுகாத்தபடி எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப முன்னேறும் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.
