சென்னை: முன்னாள் அமைச்சரும், முன்னணி அரசியல் பிரமுகருமான சி. விஜயபாஸ்கர் வரும் வியாழக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அதிகாரப்பூர்வமாக இணைய உள்ளதாகத் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வாரத்தின் தொடக்கத்தில் முக்கிய நிர்வாகக் கூட்டங்கள் வரிசையாகத் திட்டமிடப்பட்டுள்ளதே இந்த இணைப்பு விழா வியாழக்கிழமைக்கு மாற்றப்பட்டதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இதன்படி, வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் தமிழக அரசின் மிக முக்கிய அங்கங்களான ஐஏஎஸ் (IAS) மற்றும் ஐபிஎஸ் (IPS) உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இதனைத் தொடர்ந்து, புதன்கிழமையன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.

அரசு மற்றும் அரசியல் ரீதியிலான இந்தத் தொடர் கூட்டங்கள் நிறைவடைந்த பிறகு, வியாழக்கிழமையன்று இணைப்பு விழாவை நடத்த தவெக தலைமை திட்டமிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் போன்ற ஒரு மூத்த அரசியல் தலைவர் கட்சியில் இணையும் போது, அது தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய் முன்னிலையில்தான் நிகழ வேண்டும் என்பதில் இருதரப்பும் உறுதியாக இருந்துள்ளனர்.
இதனைக் கருத்தில் கொண்டு, வியாழக்கிழமையன்று இந்த இணைப்பு விழாவிற்காக முதலமைச்சர் விஜய் பிரத்யேகமாக நேரம் ஒதுக்கித் தந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக ஆட்சிக்காலத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த சி. விஜயபாஸ்கர், தமிழக அரசியலில் பரவலான கள அனுபவமும், செல்வாக்கும் கொண்டவர். தவெக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, மாற்றுக்கட்சியைச் சேர்ந்த ஒரு மூத்த தலைவர் அக்கட்சியில் இணைவது இதுவே முதல்முறை என்பதால், இந்த இணைப்பு விழா தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
