“என் மகள் போல் வேறு எந்தப் பெண்ணுக்கும் இந்த நிலை வரக்கூடாது” – திருப்பூர் ரிதன்யாவின் தந்தை கண்ணீர் மல்கப் பேட்டி; குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்ய கோரிக்கை!
”என் மகள் மீண்டும் வரப்போவதில்லை, ஆனால் அவளைப் போல உலகத்தில் உள்ள வேறு எந்தவொரு பெண்ணுக்கும் இனி இப்படி ஒரு கொடுமை நடந்துவிடக் கூடாது” என்று வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் அண்ணாதுரையின் மகள் ரிதன்யா, கடந்த 2025 ஜூன் 28 அன்று வரதட்சணை கொடுமை தாங்காமல், தனது தந்தைக்கு வாட்ஸ் அப்பில் ஆடியோ மெசேஜ் அனுப்பிவிட்டு, காருக்குள் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவத்தில் கைதான ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகிய மூவரும் தற்போது சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி நிபந்தனை ஜாமீனில் வெளியில் உள்ளனர்.

கண்ணீரில் நனைந்த முதலாம் ஆண்டு நினைவஞ்சலி:
ரிதன்யா மறைந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், இன்று அவரது இல்லத்தில் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நடைபெற்றது. இதில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்துகொண்டு ரிதன்யாவின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர். மகளின் இழப்பைத் தாங்க முடியாமல் பெற்றோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியது பார்ப்போர் நெஞ்சைக் கலங்க வைப்பதாக இருந்தது.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை மற்றும் பசும்பொன் மக்கள் தேசம் கட்சி நிறுவனத் தலைவர் இசக்கி ராஜா ஆகியோர் வழக்கில் நீதி கோரிப் பேசினர்.
எஸ்பி அந்தஸ்தில் மறுவிசாரணை தேவை – தந்தை கோரிக்கை:
செய்தியாளர்களிடம் பேசிய தந்தை அண்ணாதுரை, “குற்றவாளிகளுக்குச் சட்டப்படி கடுமையான ஆயுள் தண்டனை கிடைக்க வேண்டும். அதற்கான சட்டப் போராட்டத்தை நான் தொடர்ந்து நடத்தி வருகிறேன். இந்த வழக்கில் காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணை மற்றும் குற்றப்பத்திரிகை திருப்திகரமாக இல்லை. எனவே, ஒரு எஸ்பி (SP) அந்தஸ்தில் உள்ள உயரதிகாரி மூலம் இந்த வழக்கை மறுவிசாரணை செய்து, புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுக்கிறேன். தற்போது வழக்கு மகிளா நீதிமன்றத்திற்கு வந்துள்ள நிலையில், விசாரணைத் தேதிக்காகக் காத்திருக்கிறேன்” என்று கூறினார்.
முதலமைச்சர் தலையிட வேண்டும் – இசக்கி ராஜா வலியுறுத்தல்:
அஞ்சலி செலுத்த வந்த பசும்பொன் மக்கள் தேசம் கட்சித் தலைவர் இசக்கி ராஜா பேசுகையில், “பெண் பிள்ளைகளைத் தெய்வமாக மதிக்கும் தமிழ் மண்ணில், வரதட்சணை கொடுமையால் ஒரு பட்டதாரிப் பெண் உயிரிழந்திருப்பது ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. உயிரிழப்பதற்கு முன் ரிதன்யா அனுப்பிய ஆடியோ பதிவே மிக வலுவான ‘மரண வாக்குமூலம்’ ஆகும்.
பெண் பிள்ளைகளின் பாதுகாப்பில் தனி கவனம் செலுத்தி வரும் முதலமைச்சர் ஜோசப் விஜய், இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும். குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து, அவர்களை மீண்டும் சிறையில் அடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு முறையான நீதி விசாரணை மூலம் தகுந்த நீதி கிடைக்கச் செய்வதே, எதிர்காலத்தில் தமிழகத்தில் இதுபோன்ற கொடுமைகள் நிகழாமல் தடுப்பதற்கான பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கும்” எனத் தெரிவித்தார்.
