
கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டு வரும் செங்கற்களால் கட்டப்பட்ட உலைகலன்களின் தொழில்நுட்பம், சுமார் 2600 ஆண்டுகளைக் கடந்தும் இன்று வரை மாறாமல் தமிழகத்தில் பயன்பாட்டில் இருந்து வருவது தொல்லியல் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கீழடி அகழாய்வும் உலைகலன்களும்
கீழடி பகுதியில் தற்போது 11-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பண்டைய காலத் தமிழர்கள் இரும்பை உருக்கி, ஆயுதங்கள் மற்றும் விவசாயக் கருவிகளைத் தயாரிப்பதில் சிறந்து விளங்கியுள்ளனர் என்பதற்கு சான்றாக அமைகிறது அங்கு கண்டெடுக்கப்படும் உலைகலன்கள். கரியை எரித்து, அதிலிருந்து வரும் கடுமையான வெப்பத்தில் இரும்புகளை உருக்கி, அடித்து ஆயுதங்களைச் செய்துள்ளனர்.
இதுவரை நடந்துள்ள 11 கட்ட அகழாய்வுகளில் மொத்தம் 5-க்கும் மேற்பட்ட உலைகலன்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை வெவ்வேறு வடிவங்களில் இருந்தாலும், அவை ஒரே மாதியான தொழில்நுட்பத்தின் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தற்போது நடந்து வரும் 11-ம் கட்ட ஆய்விலும் ஒரு செங்கல் கட்டுமான உலைகலன், அதன் அருகிலேயே சேதமடைந்த பானைகள் மற்றும் உலைகலன் பயன்படுத்தப்பட்டதற்கு ஆதாரமாக எரிக்கப்பட்ட மணற்குன்று ஆகியன கண்டறியப்பட்டுள்ளன.
ஐ.ஐ.டி (IIT) ஆய்வில் தெரிந்த வியப்பூட்டும் உண்மை!
கீழடி உலைகலன் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இரும்புத் துகள்கள் மற்றும் கழிவுகள், உலகத் தரம் வாய்ந்த ஆய்வகங்களுக்கும், வி.ஐ.டி (VIT) மற்றும் ஐ.ஐ.டி (IIT) ஆகிய கல்வி நிறுவனங்களுக்கும் உலோகவியல் (Metallurgical) ஆய்விற்காக அனுப்பப்பட்டன. இந்த ஆய்வின் முடிவில், கீழடி இரும்பு ஆயுதங்களில் உள்ள உலோகங்களின் விகிதம் துல்லியமாகக் கண்டறியப்பட்டுள்ளது:
உலோகம் / தனிமம்சதவிகிதம்
இரும்பு (Iron)79.80%
சிலிக்கான் (Silicon)16.50%
அலுமினியம் (Aluminium)2.35%
இந்த உலைகலன்களைப் பயன்படுத்தி பண்டைய தமிழர்கள் இரும்பு ஆணிகள், கத்திகள், ஈட்டி முனைகள், உளிகள் உள்ளிட்ட பலதரப்பட்ட இரும்பு ஆயுதங்களைத் தயாரித்துள்ளனர். இது தவிர, கீழடியில் சாயத்தொழில், கண்ணாடி மணிகள் செய்யும் தொழில் போன்றவையும் மிகச் சிறப்பாக இருந்துள்ளதை ஆய்வுகள் உறுதிபடுத்துகின்றனர். இரும்பை உருக்கி ஆயுதங்கள் தயாரிக்கும் இந்த தொழில்நுட்பம் 2600 ஆண்டிகள் கடந்து இன்றளவிலும் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் மாறாமல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் இப்போதும் உள்ள 20-க்கும் மேற்பட்ட உலைகலன்கள் மூலம் அருவா, கத்தி, மண்வெட்டி, கடப்பாரை உள்ளிட்ட புகழ்பெற்ற விவசாயக் கருவிகள் தயாரிக்கப்படுகின்றன.
திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதிகளைச் சேர்ந்த கொல்லர்கள், இன்றைய நாள் வரை அதே பழைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தான் ஆயுதங்களை தயாரித்து வருவதாகவும், முன்பு உலைக்களத்தில் நெருப்பை மூட்ட ‘துருத்தி’ எனப்படும் தோல் பையைக் கொண்டு மனிதர்கள் மூலம் காற்றடித்து வெப்பத்தை உருவாக்கினோம். இப்போது அதற்குப் பதிலாக மின்சார மோட்டார் (Blower) பொருத்தியுள்ளோம். இந்த ஒன்று மட்டும்தான் மாறியுள்ளதே தவிர, இரும்பை உருக்கி அடிக்கும் ஒட்டுமொத்தத் தொழில்நுட்பமும் 2600 ஆண்டுகளாக அப்படியே இருப்பதாகவும் பெருமிதத்துடன் கூறுகின்றனர். தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் இந்தக் காலத்தில், நவீன இயந்திரங்கள் வந்த பிறகும், தமிழர்களின் பாரம்பரிய இரும்பு உருக்குத் தொழில்நுட்பம் இன்னும் திருப்பாச்சேத்தி மண்ணில் உயிர்ப்போடு இருப்பது, கீழடி நாகரிகம் ஒரு தொடர்ச்சி என்பதை உலகிற்கு மீண்டும் நிரூபித்துள்ளது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்..
