நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தோல்வி மற்றும் கள நிலவரங்களை ஆராய்ந்த பிறகு, திராவிட முன்னேற்றக் கழகத்தில் (திமுக) கிளைக் கழகம் முதல் தலைமைக் கழகம் வரை ஒரே சீரான மறுசீரமைப்பை மேற்கொள்வதற்காக 9 நிர்வாகிகள் அடங்கிய புதிய ஆலோசனைக் குழுவை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார். இக்குழுவினர் தங்களது பரிந்துரை அறிக்கையை ஆகஸ்ட் முதல் வாரத்தில் சமர்ப்பிக்க உள்ளனர்.
இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
திமுக என்றும் வலுமிக்க எஃகுக் கோட்டை
”தமிழ்நாட்டின் நலனுக்காகவும், மக்களின் உரிமைக்காகவும் 75 ஆண்டுகளைக் கடந்தும் இயங்கி வரும் பேரியக்கம் திமுக. ஆறு முறை தமிழ்நாட்டை ஆண்டு, இன்றைய நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய பெருமை நம் கழகத்திற்கு உண்டு. எதிர்க்கட்சியாக இருக்கும்போது தமிழ்நாட்டைத் தற்காக்கும் காவல் அரணாக இருப்பதும் இதே கழகம்தான். இத்தகைய நீண்ட அரசியல் வரலாற்றில், தேர்தல் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்தபோதும், திமுக என்றைக்கும் வலுமிக்க எஃகுக் கோட்டையாகவே கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது. அதற்கு நம் கோடிக்கணக்கான உடன்பிறப்புகளின் உழைப்பே காரணம்.

ஏ.ஐ. (AI) தொழில்நுட்பம் மூலம் பெறப்பட்ட கருத்துகள்
கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே, திமுகவினரின் கருத்துகளை நேரடியாகக் கேட்க வேண்டும் என நான் முடிவெடுத்தேன். அதற்காக 38 பேர் அடங்கிய கள ஆய்வுக் குழுக்களை அமைத்து, ஒவ்வொரு தொகுதிக்கும் அனுப்பி வைத்தேன். அவர்கள் நேரடியாக நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்தித்துக் கருத்துகளைப் பெற்றனர். அதே சமயம், பொறுப்பில் இல்லாத தொண்டர்களும், கழக ஆதரவாளர்களும் தங்களது கருத்துகளைப் பகிர ஏதுவாக ஆன்லைன் வழியாகக் கருத்துகளைப் பெற ‘உடன்பிறப்பு’ செயலி பயன்படுத்தப்பட்டது.
இதன் மூலம் லட்சக்கணக்கான கருத்துகள் பெறப்பட்டன. மனிதத் தலையீடின்றி, துல்லியமாக முடிவுகளை அறிய ஏ.ஐ. (AI) செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் இக்கருத்துகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் ஒரு தனிப்பட்ட அறிக்கையை நான் தயாரித்து வைத்துள்ளேன்.
ஆகஸ்ட் முதல் வாரத்தில் அறிக்கை தாக்கல்
பெரும்பாலான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஒட்டுமொத்தக் கருத்து, காலத்திற்கேற்ற வகையில் கட்சியில் மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்பதாகவே உள்ளது. கிளைக் கழகம் முதல் தலைமைக் கழகம் வரை இந்த மாற்றத்தைச் செய்ய இதுவே சரியான தருணம். அதன்படி, பெறப்பட்ட ஆலோசனைகளைப் பரிசீலித்து, கட்சியின் கட்டமைப்பில் ஒரே சீரான மாற்றங்களைப் பரிந்துரைக்க தங்கம் தென்னரசு உள்ளிட்ட 9 முக்கிய நிர்வாகிகள் அடங்கிய ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவானது, திமுகவின் மாவட்ட அமைப்புகள், சார்பு அணிகள், தேர்தல் பணி நடைமுறைகள் மற்றும் உட்கட்சிப் பிரிவுகளில் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்புகள் குறித்து ஆராய்ந்து, தங்களது இறுதிப் பரிந்துரையை ஆகஸ்ட் முதல் வாரத்தில் என்னிடம் தாக்கல் செய்யும்.
இக்குழு அளிக்கும் பரிந்துரைகள், கட்சியின் உயர்நிலைச் செயல்திட்டக் குழுவில் முழுமையாக விவாதிக்கப்பட்டு, அடுத்த நூறாண்டுகளுக்கு திமுகவை வழிநடத்தும் வகையில் மிக வலிமையான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் உடனே மேற்கொள்ளப்படும்.” இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.172.50 குறைவு: இல்லத்தரசிகளுக்கு ஏமாற்றம், வணிகர்களுக்கு நிம்மதி
