
ரோபோக்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன், மனிதர்கள் இல்லாமலேயே இயங்கும் இந்தியாவின் முதல் ‘டார்க் ஃபேக்டரி’ (Dark Factory) மாடல் காஞ்சிபுரம் ஒரகடத்தில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. செமிகண்டக்டர் சிப் உற்பத்தியில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ள பாலிமாடெக் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இந்த அதிநவீன ஆலையை அமைத்துள்ளது.
மனிதர்களும் இல்லை; விளக்குகளும் இல்லை! அது என்ன ‘டார்க் ஃபேக்டரி’?

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில் பாலிமாடெக் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் செமிகண்டக்டர் சிப்புகள் மற்றும் மேம்பட்ட மின்னணு கூறுகளைத் தயாரித்து வருகிறது. இத்தொழிற்சாலை “டார்க் ஃபேக்டரி” முறையில் இயங்குகிறது. அதாவது, உற்பத்தியின் போது மனிதர்களின் தலையீடு முற்றிலும் கிடையாது.
ரோபோக்களுக்குப் பார்வைத் திறன் தேவையில்லை என்பதால், ஆலைக்குள் விளக்குகள் (Light) ஏதும் எரியவிடாமல் முற்றிலும் இருட்டாகவே இருக்கும். விளக்குகள் தேவையில்லாமல், மனிதர்களின் நடமாட்டம் இல்லாமல், மிகத் துல்லியமான ரோபோடிக்ஸ் மற்றும் AI மூலம் இயங்கும் இந்த முறை இந்திய உற்பத்தித் துறையில் ஒரு புதிய மைல்கல் ஆகும்.

110 பில்லியன் டாலர் சந்தையை நோக்கி இந்தியா
தற்போதைய டிஜிட்டல் உலகில் மொபைல் போன்கள், கார்கள், கணினிகள், தொலைக்காட்சிகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் என அனைத்திற்கும் செமிகண்டக்டர் சிப்புகள் இதயம் போன்றவையாக மாறியுள்ளன. வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் செமிகண்டக்டர் துறை சுமார் 110 பில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மதிப்பை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாலிமாடெக் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஈஸ்வர ராவ் நந்தம் கூறுகையில், “செமிகண்டக்டர் உற்பத்திக்கு மிக மிக அதிக துல்லியமும், கட்டுப்படுத்தப்பட்ட சுத்தமான சூழலும் (Cleanroom Environment) தேவை. அதனால்தான் ஒரகடம் ஆலையை இந்தியாவின் முன்னோடி AI-இயங்கும் டார்க் ஃபேக்டரி மாடலாக மாற்றினோம். இங்கு தயாரிக்கப்படும் சிப்புகள் வாகனம், மருத்துவம், தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன” என்றார்.

சர்வதேச அளவில் தடம் பதிக்கும் தமிழக நிறுவனம்
தமிழகத்தில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் பாலிமாடெக் குழுமம், தனது தொழில்துறை செயல்பாடுகளைச் சிங்கப்பூர், அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் எஸ்டோனியா ஆகிய நாடுகளுக்கும் விரிவுபடுத்தியுள்ளது. மேலும், இந்தியாவில் சத்தீஸ்கர் மாநிலத்திலும் புதிய உற்பத்தி ஆலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மருத்துவத் துறையில் புதுமை: ‘வெயின் ஃபைண்டர்’ (Vein Finder) அறிமுகம்
மருத்துவத் துறையிலும் பாலிமாடெக் நிறுவனம் ஒரு புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது. குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு ரத்த மாதிரி எடுக்கும்போது, அவர்களின் கைகளில் ரத்த நாளங்களை (Veins) கண்டறிவதில் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் பெரும் சிரமம் ஏற்படும்.
இதனைத் தவிர்க்கும் வகையில், ரத்த நாளங்களைத் துல்லியமாகக் காட்டும் “வெயின் ஃபைண்டர்” (Vein Finder) என்ற புதிய கருவியை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. மருத்துவத் துறையில் பெரும் வரவேற்பைப் பெறவுள்ள இக்கருவியின் சந்தை மதிப்பு 2 லட்சம் ரூபாய்க்கும் மேல் இருக்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
