கன்னியாகுமரி மாவட்ட மக்களின் பல ஆண்டுகால கடுமையான எதிர்ப்பையும் மீறி, கிள்ளியூர் தாலுகாவின் 6 கடலோரக் கிராமங்களைப் பாழாக்கும் அணுக்கனிம சுரங்கத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த முயற்சிகள் நடந்து வருவது மீனவ மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அணு உலைக்கான மூலப்பொருள் வேட்டை :
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில், ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஐ.ஆர்.இ.எல் (IREL – இந்திய அரிய வகை மணல் ஆலை) செயல்பட்டு வருகிறது. குமரி மாவட்ட கடற்கரை மணலில் அதிகளவில் நிறைந்துள்ள ‘மோனோசைட்’ (Monazite) தாதுவிலிருந்து யுரேனியம் மற்றும் தோரியத்தைப் பிரித்தெடுக்கும் பணிகளை இந்நிறுவனம் செய்து வருகிறது. இந்த இரு கனிமங்களும் அணு உலைகளுக்கான மிக முக்கிய மூலப்பொருட்களாகும்.

6 கடலோரக் கிராமங்களை விழுங்கும் புதிய திட்டம் :
தற்போது, கிள்ளியூர் தாலுகாவிற்குட்பட்ட கீழ்மிடாலம், மிடாலம், இனயம், புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லன்கோடு ஆகிய 6 முக்கியக் கடலோரக் கிராமங்களில் உள்ள சுமார் 1,144 ஹெக்டேர் பரப்பளவில் அணுக்கனிமங்களைத் தோண்டி எடுக்க ஐ.ஆர்.இ.எல் நிர்வாகம் திட்டமிட்டு, அதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.
இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலத்தின் அனுமதி அவகாசம் முடிவடைந்த நிலையில், அதனை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துத் தமிழக அரசு தற்பொழுது அரசாணை வெளியிட்டிருப்பதுதான் இந்த திடீர் கொந்தளிப்புக்குக் காரணமாக அமைந்துள்ளது.

கதிர்வீச்சு அபாயமும், அழியும் கடலோர மண்டலமும்!
இத்திட்டத்திற்காகக் குறிவைக்கப்பட்டுள்ள 1,144 ஹெக்டேர் நிலப்பரப்பில், சுமார் 353 ஹெக்டேர் நிலம் மிக அதீதப் பாதுகாக்கப்பட்ட கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் (CRZ) கீழ் வருகிறது. இங்கிருந்து சுமார் 59.88 மில்லியன் டன் அளவிலான அணுக்கனிமங்களை வெட்டியெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இங்குச் சுரங்கம் அமைக்கப்பட்டால்:
கடலோரக் கிராமங்களின் சுற்றுச்சூழல் ஒட்டுமொத்தமாகச் சீர்குலைந்துவிடும்.
நிலத்தடி நீர் முற்றிலும் மாசடைந்து, குடிநீருக்குப் பஞ்சம் ஏற்படும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, அணுக்கனிமங்களை வெட்டும்போது வெளியாகும் கதிர்வீச்சு (Radiation) காரணமாக இப்பகுதி மக்களுக்குப் புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்கள் தாக்கும் அபாயம் ஏற்படும் எனச் சூழலியல் ஆர்வலர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
”அரசாணையை ரத்து செய்; இல்லையேல் போராட்டம்” என மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து நெய்தல் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த குறும்பனை பெர்லின் அளித்த பேட்டியில், ”மக்களின் உணர்வுகளுக்கும், வாழ்வாதாரத்திற்கும் மதிப்பளித்துத் தமிழக அரசு இந்த ஆபத்தான அணுக்கனிம சுரங்கத் திட்டத்திற்கான கால நீட்டிப்பு அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். கடலோரக் கிராமங்களை அழிவிலிருந்து காக்க வேண்டியது மாநில அரசின் கடமை. உடனடியாக அரசு இத்திட்டத்தைக் கைவிடவில்லை என்றால், ஒட்டுமொத்த மீனவ மக்களையும், பொதுமக்களையும் திரட்டி மாவட்ட அளவில் மிகப்பெரிய தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம்.” என்று எச்சரித்துள்ளார்.
தேர்தல் கால வாக்குறுதிகளுக்கு மாறாக இந்தத் திட்டத்திற்கு அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகார், தென் மாவட்ட அரசியல் களத்திலும், மீனவ மக்கள் மத்தியிலும் தற்பொழுது பெரும் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
