Homeசெய்திகள்தமிழ்நாடுஅரசுப் பள்ளியா? கட்சி அலுவலகமா? திருவண்ணாமலையில் தவெக-வினர் செய்த செயலால் சர்ச்சை

அரசுப் பள்ளியா? கட்சி அலுவலகமா? திருவண்ணாமலையில் தவெக-வினர் செய்த செயலால் சர்ச்சை

-

- Advertisement -

அரசுப் பள்ளியா? கட்சி அலுவலகமா? திருவண்ணாமலையில் தவெக-வினர் செய்த செயலால் சர்ச்சை!
​முதல்வர் பிறந்தநாள் விழாவால் 3 மணி நேரம் முடங்கிய வகுப்புகள்: முதன்மைக் கல்வி அலுவலர் அதிரடி நடவடிக்கை

அரசுப் பள்ளியா?

we-r-hiring

திருவண்ணாமலையில் அரசுப் பள்ளி கட்டிடம் ஒன்றைத் தமிழக வெற்றிக் கழக (தவெக) கட்சியின் நிறத்திற்கு மாற்றியமைத்து விழா நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாநகராட்சியில் டவுன்ஹால் நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

பள்ளிக்கு அடித்த கட்சித் வண்ணம்:
​தமிழக முதல்வரும் தவெக தலைவருமான ஜோசப் விஜய் அவர்களின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு, அக்கட்சியின் மாநகராட்சி மகளிர் அணி செயலாளர் துர்கா தேவி ஏற்பாட்டில் இப்பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உபகரணங்கள், பள்ளிப் பெயர் பலகை மற்றும் பள்ளி கட்டிட சுவர்களுக்கு வர்ணம் பூசும் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்நிகழ்ச்சியில் தவெக மாவட்டச் செயலாளர் கே.பாரதிதாசன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
​அரசுப் பள்ளி கட்டிடங்களுக்கு வர்ணம் பூசுவது குறித்து பள்ளிக்கல்வித்துறைக்கு என்று தனியாக விதிகள் (Protocol) உள்ள சூழலில், தவெக வினர் பள்ளி கட்டிடத்தின் முகப்பில் பாதி அளவிற்குத் தங்கள் கட்சியின் நிறமான மஞ்சள் வண்ணத்தைப் பூசியுள்ளனர். மேலும், பள்ளி வளாகம் முழுவதும் சிவப்பு நிறத் துணிகள், கம்பளங்கள் மற்றும் மஞ்சள்-சிவப்பு பலூன்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதனால் அது அரசுப் பள்ளியா அல்லது தவெக கட்சி அலுவலகமா என்றே தெரியாத அளவுக்குக் காட்சியளித்தது.

சி.இ.ஓ அதிர்ச்சி – பலூன்கள் அகற்றம்:
விழாவில் பங்கேற்க வந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (CEO), பள்ளி வளாகம் முழுக்கக் கட்சியின் நிறத்தில் அலங்கரிக்கப்பட்டு, கட்டிடத்தின் வண்ணம் மாற்றப்பட்டிருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுதொடர்பாகப் பள்ளித் தலைமை ஆசிரியரைக் கடுமையாகச் சாடிய அவர், உடனடியாகக் கட்சி நிற பலூன்களை அகற்றுமாறு உத்தரவிட்டார். அதன்பேரில் பலூன்கள் அகற்றப்பட்டு ஓரமாக வைக்கப்பட்டன.

பாடம் எடுக்காமல் முடக்கப்பட்ட மாணவர்கள்:
​இந்த விழாவிற்காகப் பள்ளிக்கு பின்புறம் உள்ள மைதானத்தில் மாணவ, மாணவிகள் காலை முதலே சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக அமர வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்குத் தண்ணீர் மற்றும் பிஸ்கட்டுகள் வழங்கப்பட்ட போதிலும், காலை நேர வகுப்புகள் ஏதும் நடத்தப்படாமல், மாணவர்கள் விழாவிலேயே முடக்கப்பட்டுக் கிடந்தது பெற்றோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
​அரசு விதிமுறைகளை மீறி, அரசுப் பள்ளி கட்டிடத்தைக் கட்சி வண்ணத்திற்கு மாற்றி தவெக-வினர் விழா நடத்தியுள்ள இச்சம்பவம், கல்வித் துறையிலும் திருவண்ணாமலை வட்டாரத்திலும் தற்பொழுது பெரும் பேசும்பொருளாக மாறியுள்ளது.

MUST READ