நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறைவாசல் அருகே, போலீசாரை அதிரடியாகத் தள்ளிவிட்டு பிடிவாரண்டு கைதி ஒருவன் தப்பி ஓடிய விவகாரத்தில், பாதுகாப்புப் பணியில் இருந்த இரண்டு காவலர்கள் அதிரடியாக சஸ்பெண்ட் (பணி இடைநீக்கம்) செய்யப்பட்டுள்ளனர்.


யார் இந்த ஆறுமுக கனி?
நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுக கனி (25). இவர் மீது நெல்லை தாழையூத்து மற்றும் அதன் சுற்றுவட்டாரக் காவல் நிலையங்களில் பல திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல், ஆறுமுக கனி நீண்ட நாட்களாகத் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.
இதையடுத்து, அவரை எப்படியாவது கைது செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் சார்பில் அவருக்கு ‘பிடிவாரண்டு’ (Warrant) பிறப்பிக்கப்பட்டது.
சிறை வாசலில் சினிமா பாணி எஸ்கேப்:
நீதிமன்ற உத்தரவின்படி தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தாழையூத்து போலீசார், ஆறுமுக கனியை அதிரடியாகக் கைது செய்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, நீதிமன்றக் காவலில் வைப்பதற்காகப் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு நேற்று அழைத்து வந்தனர். தாழையூத்து காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் பார்வதி மற்றும் மல்லிகை ராஜ் ஆகிய இருவரும்தான் கைதியைச் சிறையில் அடைக்கும் பொறுப்புடன் அழைத்து வந்தனர்.
கார் பாளையங்கோட்டை மத்திய சிறையின் நுழைவாயில் பகுதிக்கு வந்து சேர்ந்தது. கைதியைச் சிறைக்குள் அழைத்துச் செல்ல முற்பட்டபோது, காவலர்கள் இருவரும் சற்றே அசந்த நேரத்தைப் பார்த்துக் காத்திருந்த ஆறுமுக கனி, மின்னல் வேகத்தில் காவலர்கள் இருவரையும் பலமாகத் தள்ளிவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். இதனால் அதிர்ச்சியடைந்த காவலர்கள் கூச்சலிட்டுப் பின் தொடர்வதற்குள், அவன் கண் இமைக்கும் நேரத்தில் மறைந்துவிட்டான்.
காவலர்கள் மீது அதிரடி நடவடிக்கை:
மத்திய சிறைச்சாலை வாசலிலேயே போலீசாரை ஏமாற்றிவிட்டு பிடிவாரண்டு கைதி தப்பியோடிய சம்பவம் நெல்லை காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதுகாப்புப் பணியில் அலட்சியமாக இருந்து, கைதியைத் தப்பிக்க விட்டதாகக் காவலர்கள் பார்வதி மற்றும் மல்லிகை ராஜ் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து நெல்லை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) அதிரடி உத்தரவிட்டுள்ளார். மேலும், தப்பியோடிய வழிப்பறி கொள்ளையன் ஆறுமுக கனியைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
