திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு சம்பவம் தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ள நிலையில், பல தொழிலாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல், மயக்கம், தலைச்சுற்றல் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டன. சிலருக்கு மூக்கு மற்றும் காது வழியாக ரத்தக்கசிவு ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வெளிமாநில தொழிலாளர்கள் எனக் கூறப்படுகிறது. பலர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன், சிலர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் கண்காணிப்பில் உள்ளனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஒடிசா மாநில தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் சென்னை வந்து, பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை சந்தித்து நிலைமையை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் அவர்கள் நேரில் சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் அடிப்படையில் தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பொறுப்பில் இருந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொழிற்சாலைகளில் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் விஷவாயு கையாளும் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. சம்பவத்தின் காரணம் மற்றும் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஓசூர் பத்லபள்ளி மேம்பாலப் பணி – போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
