கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், வளாகத்தில் போதைப்பொருள் புழக்கம் குறித்து நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்த மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவரை 20 பேர் கொண்ட கும்பல் கொடூரமாகத் தாக்கிப் படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீதும், மாணவனை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய கல்லூரி நிர்வாகத்தின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயிரிழந்த மாணவனின் பெற்றோரும் உறவினர்களும் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மோதலும், கல்லூரி நிர்வாகத்தின் விசாரணைப் படியும்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த வடக்கனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கென்னடி. இவரது மகன் கே. அமுதன் (20), கோவையில் உள்ள ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த இரு மாதங்களுக்கு முன்பு, விடுதியில் தங்கியிருந்த அமுதன் தனது நண்பர் அஜீஸ் என்பவருடன் இரவு நேரத்தில் விடுதியின் கீழ்த்தளத்திற்குச் சென்றுள்ளார். அப்போது சமையல் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில ஊழியர்களுக்கும், மாணவர் அஜீஸுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, மறுநாள் சமையல் ஊழியர்கள் பணிநிறுத்தம் செய்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து, கல்லூரி டீன், துறைத் தலைவர் மற்றும் முதல்வர் ஆகியோர் மாணவனின் பெற்றோரை வரவழைத்து விசாரணை நடத்தி, விடுதியை விட்டு உடனடியாகக் காலி செய்யுமாறு உத்தரவிட்டுள்ளனர். ஆனால், அந்த மோதலில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என அமுதன் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
ரகசிய வாக்குமூலமும் விபரீதமும்
தொடர்ந்து, கல்லூரி வளாகம் மற்றும் விடுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் நபர்களின் பெயர்களை எழுதிக் கொடுத்தால், மீண்டும் விடுதியில் அனுமதிக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அமுதனிடம் கல்லூரி நிர்வாகத்தினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர். தகவலை ரகசியமாக வைப்பதாகக் கல்லூரி நிர்வாகம் உறுதியளித்ததை நம்பி, அமுதனும் சில பெயர்களை எழுதிக் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், இன்டர்னல் தேர்வு எழுதுவதற்காகக் கல்லூரிக்கு வந்த அமுதன், போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் குறித்து நிர்வாகத்திடம் காட்டிக்கொடுத்த விஷயம் பிற மாணவர்களுக்குத் தெரியவந்துள்ளது. 20 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல் நேற்று அமுதன் தனது நண்பர் ஸ்ரீமனுடன் வெளியில் வந்தபோது, இருசக்கர வாகனங்களில் வந்த 20-க்கும் மேற்பட்ட நபர்கள் அவர்களைச் சூழ்ந்துள்ளனர்.
உடன் வந்த ஸ்ரீமன் தப்பி ஓடிய நிலையில், அமுதனைப் பலவந்தமாகப் பிடித்துச் சென்ற அக்கும்பல், கல்லூரி மைதானத்தில் வைத்து இரும்புத் தடி மற்றும் கத்தியால் கொடூரமாகத் தாக்கிப் படுகொலை செய்துள்ளது. இச்சம்பவத்தை மறைந்திருந்து பார்த்த நண்பர் ஸ்ரீமன் தற்போது சாட்சியமளிக்க முன்வந்துள்ளார்.
பெற்றோரின் குற்றச்சாட்டு: “என் மகனை 20 பேர் கொண்ட கும்பல் பைக்ல வந்து தூக்கிட்டுப் போய், கிரவுண்டுல வச்சு இரும்பு ராடாலையும் கத்தியாலையும் கொடூரமாகத் தாக்கியிருக்காங்க. மதியம் 12 மணி வரை என்னிடம் பேசிய என் மகனைத் தாக்கிவிட்டு, பின்னர் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்” எனத் தந்தை கென்னடி கண்ணீருடன் தெரிவித்தார்.
மேலும், கல்லூரியின் டீன், துறைத் தலைவர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஆகியோர் தங்கள் மகனைத் தீவிர மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும், தேர்வு நடக்கும் நேரத்தில்கூட ஹாஸ்டலை உடனே காலி செய்யச் சொல்லி கெடுபிடி விதித்ததால் கடந்த 3 நாட்களாக மாணவன் தங்குவதற்கு அறை தேடி அலைந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார். சம்பவம் நடந்து இவ்வளவு நேரமாகியும் கல்லூரி நிர்வாகத்திலிருந்து யாரும் நேரில் வந்து பார்க்கவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.
தாயின் கதறல்
உயிரிழந்த மாணவனின் தாய் கூறுகையில், “என் மகன் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டதாக எங்களுக்குத் தவறான தகவல் சொன்னார்கள். ஆனால் என் மகன் எந்தத் தப்பும் செய்யவில்லை. இந்தக் கல்லூரியில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக உள்ளது. என் மகனுக்கு நேர்ந்த நிலைமை இனி எந்தவொரு மாணவருக்கும் ஏற்படக்கூடாது. கல்லூரி நிர்வாகத்தின் மீதும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் துயரத்துடன் கோரிக்கை விடுத்தார்.
இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோர்ட் மற்றும் கல்வி நிலைய வளாகத்தில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம் கோவைப் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி: லோன் தருவதாகக் கூறி மலைவாழ் குடும்பத்திடம் ₹15.5 லட்சம் மோசடி!
