கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியைச் சேர்ந்த மலைவாழ் குடும்பத்தை குறிவைத்து ஸ்பேம் (Spam) கும்பல் நூதன முறையில் கைவரிசை காட்டியுள்ளது. தனிநபர் கடன் (Personal Loan) வழங்குவதாக ஆசை வார்த்தை கூறி, பல்வேறு கட்டங்களாக ரூ.15 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து ஏற்கனவே புகார் அளித்தும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, பாதிக்கப்பட்டவரின் மனைவி கைக்குழந்தையுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்ணீருடன் பேட்டியளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நூதன மோசடியின் பின்னணி
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை மட்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவரின் தொலைபேசி எண்ணிற்குத் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், தங்களுக்குப் பர்சனல் லோன் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். மேலும், அதற்கு இன்சூரன்ஸ் மற்றும் ஆவணச் செலவுகள் (Document charges) செலுத்த வேண்டும் எனத் தெரிவித்து சிறுகச் சிறுகப் பணம் கேட்டுள்ளனர்.

இதனை நம்பிய அசோக்குமார், கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை கூகுள் பே (GPay) மற்றும் வங்கி கணக்குகள் மூலமாகத் தொடர்ந்து பணம் அனுப்பியுள்ளார். மொத்தமாக ரூ.15,50,000 (பதிினைந்து லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்) வரை அந்த ஸ்பேம் கும்பல் நூதன முறையில் அபேஸ் செய்துள்ளது.
சுவிட்ச் ஆஃப் ஆன எண்கள் மற்றும் அலட்சியம்
ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த அசோக்குமார், அந்தத் தொலைபேசி எண்ணிற்குத் தொடர்பு கொள்ள முயன்றபோது அது ‘சுவிட்ச் ஆஃப்’ செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர், கடந்த மே மாதமே கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இருப்பினும், இதுகுறித்து காவல்துறையினர் முறையாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தாமல் காலம் தாழ்த்தி வருவதாகக் கூறப்படுகிறது.
சேலம் மாவட்டத்துடன் தொடர்பு
அசோக்குமார் ஜிபே மற்றும் வங்கி கணக்குகள் மூலமாக அனுப்பிய அத்தனை பணமும், சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்களின் வங்கிக் கணக்குகளுக்குச் சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்த விவரங்களையும் தனது புகார் மனுவில் அசோக்குமார் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
கைக்குழந்தையுடன் கதறிய பெண்
இந்நிலையில், தாங்கள் ஏமாற்றப்பட்ட பணத்தை மீட்டுத் தரக் கோரியும், சம்பந்தப்பட்ட மோசடி கும்பலைக் கைது செய்ய வலியுறுத்தியும் அசோக்குமாரின் மனைவி பிரியா தனது கைக்குழந்தையுடன் இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்தார். அங்கு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், தங்களது வாழ்வாதாரத்தை மீட்டுத் தருமாறு கண்ணீர்மல்கக் கோரிக்கை விடுத்தார்.
தற்போது கல்வராயன்மலைப் போன்ற மலைவாழ் மக்களைக் குறிவைத்து இதுபோன்று ஸ்பேம் கும்பல்கள் கைவரிசை காட்டுவது அதிகரித்து வருவதால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது.
