Homeசெய்திகள்மாவட்டம்வத்தலகுண்டு அருகே உச்சகட்டப் பரபரப்பு: டாஸ்மாக் கடைக்கு சீல் வைக்கக் கோரி மாணவ-மாணவிகள், பெண்களுடன் திடீர்...

வத்தலகுண்டு அருகே உச்சகட்டப் பரபரப்பு: டாஸ்மாக் கடைக்கு சீல் வைக்கக் கோரி மாணவ-மாணவிகள், பெண்களுடன் திடீர் தர்ணா-தீக்குளிப்பு எச்சரிக்கையால் பதற்றம்!

-

- Advertisement -

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள ரெங்கப்பநாயக்கன்பட்டியில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் மதுக்கடையை உடனடியாக அகற்றி சீல் வைக்கக் கோரி, பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட கிராமப் பெண்கள் கடையை முற்றுகையிட்டுத் தரையில் அமர்ந்து தீவிர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பள்ளி, கோயில்கள் அருகே இயங்கும் மதுக்கடை: பொதுமக்கள் குற்றச்சாட்டுவத்தலகுண்டு அருகே உச்சகட்டப் பரபரப்பு: டாஸ்மாக் கடைக்கு சீல் வைக்கக் கோரி மாணவ-மாணவிகள், பெண்களுடன் திடீர் தர்ணா-தீக்குளிப்பு எச்சரிக்கையால் பதற்றம்!

சுமார் 1,000 குடும்பங்கள் வசித்து வரும் ரெங்கப்பநாயக்கன்பட்டி கிராமத்தின் பிரதான சாலையோரத்தில் இந்த அரசு டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்தச் சாலை வழியாக ஆண்டிபட்டி, காமாட்சிபுரம், தெப்பத்துப்பட்டி, குன்னுவாராயன்கோட்டை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தினசரி பயணித்து வருகின்றனர். குறிப்பாக, இந்த டாஸ்மாக் கடைக்கு மிக அருகிலேயே அரசு தொடக்கப்பள்ளி, வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையம் ஆகியவை அமைந்துள்ளன. இதனால், அவ்வழியாகச் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பெண்கள், முதியவர்கள் மற்றும் மருத்துவமனைக்குச் செல்வோர் கடும் அச்சத்தோடும் அச்சுறுத்தலோடும் செல்ல வேண்டிய சூழல் நிலவுகிறது. மேலும், சாலையோர மதுக்கடையால் அப்பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகளும் நிகழ்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

we-r-hiring

அதிகாரிகளின் பொய் வாக்குறுதி: ஏமாற்றமடைந்த மக்கள்
கடையை அகற்றக் கோரி நிலக்கோட்டை வட்டாட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வீதிக்கு வந்து சாலை மறியல் மற்றும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, சம்பவ இடத்திற்கு வந்த நிலக்கோட்டை வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர், “விரைவில் இந்த டாஸ்மாக் கடை வேறு இடத்திற்கு மாற்றப்படும்” என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. ஆனால், பல மாதங்கள் கடந்தும் வாக்குறுதியை நிறைவேற்றாமல் அதே இடத்தில் தொடர்ந்து கடை இயங்கி வந்ததால், மக்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

“சீல் வைக்காவிட்டால் தீக்குளிப்போம்”: போராட்டக் களத்தில் அதிரடி எச்சரிக்கை இந்நிலையில் இன்று, 200-க்கும் மேற்பட்ட கிராமப் பெண்களும், சீருடை அணிந்த பள்ளி மாணவ-மாணவிகளும் ஊர்வலமாக திரண்டு வந்து, அரசு டாஸ்மாக் கடைக்கு முன்பாக அமர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பித் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது, ரெங்கப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சின்னத்தாய் என்ற பெண் கூறுகையில்: “அதிகாரிகள் தொடர்ந்து எங்களை ஏமாற்றி வருகின்றனர். இந்த டாஸ்மாக் கடைக்கு உடனடியாகச் சீல் வைக்கவில்லை என்றால், நாங்கள் எங்கள் குழந்தைகளுடன் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை.” என்று கண்ணீருடன் எச்சரித்தது போராட்டக் களத்தில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது.

அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை: தொடரும் பதற்றம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளிச் சிறுவர்களும் பெண்களும் கடையை முற்றுகையிட்டுப் போராடி வருவதால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

கீரிமேட்டை தனி வருவாய் கிராமமாக அறிவிக்கக் கோரி பொதுமக்கள் ஒப்பாரி வைத்து நூதன போராட்டம்!

MUST READ