கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள என்ஜிஓ காலனியைச் சேர்ந்த பிரபல முன்னாள் ரவுடி கோவையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகவும், சொத்துக்காக அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கூறி, அவரது சகோதரிகள் மற்றும் உறவினர்கள் உடலை அடக்கம் செய்ய மறுத்து வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


பின்னணி என்ன?
சுசீந்திரம் அருகே உள்ள என்ஜிஓ காலனியைச் சேர்ந்தவர் உதயகுமார் (56). இவர் மீது கொலை வழக்குகள் உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கிடையே, நாகர்கோயில் பகுதியில் நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் இவருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டதை அடுத்து, பாதுகாப்பு கருதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குமரி மாவட்டத்தை விட்டு வெளியேறி வேறு இடங்களில் வசித்து வந்துள்ளார்; அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து செல்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், சேலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் எனக் கூறிக் கொள்ளும் மலர்வேந்தன் என்பவருடன் உதயகுமார் முறையான திருமணம்மின்றி வாழ்ந்து வந்ததாகத் தெரிகிறது.
மரணம் மற்றும் உடலைக் கொண்டுவருவதில் சந்தேகம்
இதனிடையே, உதயகுமார் இறந்துவிட்டதாக மலர்வேந்தனின் தரப்பைச் சேர்ந்தவர்கள் உதயகுமாரின் சகோதரிக்குத் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், மலர்வேந்தன், அவரது தாய், தந்தை மற்றும் சகோதரன் ஆகியோர் உதயகுமாரின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான என்ஜிஓ காலனியில் உள்ள வீட்டிற்குக் கொண்டு வந்து, இறுதிச் சடங்கு மற்றும் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
உறவினர்களின் போராட்டம் மற்றும் குற்றச்சாட்டு
தகவலறிந்து விரைந்து வந்த உதயகுமாரின் சகோதரிகளான தமிழ்செல்வி மற்றும் உதயசந்திரிகா ஆகியோர், தங்களது சகோதரரின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் குற்றம் சாட்டினர். சொத்துக்காக அவரை யாரோ திட்டமிட்டுக் கொன்றிருக்கக்கூடும் எனச் சந்தேகிப்பதாகத் தெரிவித்த அவர்கள், உரிய உடற்கூர் ஆய்வு (Post-mortem) நடத்தப்பட்ட பின்னரே உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க முடியும் எனக் கூறி வீட்டின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இதுகுறித்து சுசீந்திரம் காவல் நிலையத்திற்கும், கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கும் அதிகாரப்பூர்வமாகப் புகாரும் அளித்துள்ளனர்.
இதுகுறித்து தன்னை உதயகுமாரின் மனைவி எனக் கூறிக்கொள்ளும் மலர்வேந்தனிடம் கேட்டபோது, “இந்தப் புகார் தொடர்பாக நான் இப்போது கருத்து கூற விரும்பவில்லை; வழக்கறிஞரிடம் கலந்து ஆலோசித்த பின் பதிலளிப்பேன்” என்று தெரிவித்தார்.
முன்னாள் ரவுடியின் மரணமும், அவரது உடலை வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதும் கன்னியாகுமரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
