
முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டிருப்பது தேவையற்றது என்றும், தமிழக அரசு அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
”அரசியல் பேச்சுகளை வரிக்கு வரி ஆராயக் கூடாது”:

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:”முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் கைது செய்யப்பட்டதற்குப் புதிய தமிழகம் கட்சி சார்பில் எனது பலத்த கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அரசியல்வாதிகள் மேடைகளில் பேசுவதை வரிக்கு வரி ஆய்ந்து, அதற்கு வியாக்கியானம் கொடுத்து, அதன் மீது இதுபோன்ற கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவலர்களும் இந்த ஒரு பணியை மட்டுமே செய்ய வேண்டிய அவல நிலை ஏற்படும்.

மேடைப்பேச்சுகளுக்கான எல்லை:
பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தனிநபரின் சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படும் வகையிலோ அல்லது அவருடைய சாதி, மதம், மொழி குறித்து ஆபாசமாகவோ, அருவருப்பாகவோ, கண்ணியக் குறைவாகவோ பேசாத வரையில், அரசியல்வாதிகளின் எந்தவொரு மேடைப்பேச்சுக்கும் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
அந்த வகையில், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களின் பேச்சிற்காக, அவர் மீது பிணையில் வர முடியாத பிரிவுகளில் (Non-Bailable) வழக்குப்பதிவு செய்து, நள்ளிரவில் கைது செய்திருப்பது முற்றிலும் தேவையற்ற ஒன்றாகும்.

அரசுக்குச் சகிப்புத்தன்மை தேவை:
மக்களாட்சியில் ஆட்சியாளர்களுக்குச் சகிப்புத்தன்மை என்பது மிக மிக அவசியமான ஒன்றாகும். எதற்கெடுத்தாலும் கைது நடவடிக்கை என்பது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல.
எனவே, முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளைத் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மேலும், அவரை உடனடியாக சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் எனப் புதிய தமிழகம் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று டாக்டர் கே. கிருஷ்ணசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
