சென்னை பல்லாவரம் ஜி.எஸ்.டி சாலையில் சிக்னலுக்காக நின்றிருந்த வேன் மீது, பின்னால் வந்த முட்டை லோடு வேன் மோதிய பயங்கர விபத்தில் சிக்கி இள வயது ஓட்டுநர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த ஓட்டுநரின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையை நோக்கி ஜி.எஸ்.டி சாலையில் ஈசர் வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. பல்லாவரம் பகுதியில் வந்தபோது சிக்னல் விழுந்ததால் அந்த வேன் சாலையில் நிறுத்தப்பட்டது. அதே திசையில் நாமக்கல்லில் இருந்து பல ஆயிரம் முட்டைகளை ஏற்றிக்கொண்டு மற்றொரு ஈசர் வேன் பின்னால் வேகமாக வந்துள்ளது.
அப்போது, எதிர்பாராதவிதமாக முன்னால் நின்றிருந்த வேனின் பின்புறத்தில் முட்டை லோடு வேன் பயங்கர சத்தத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த அதிவேக மோதலில், பின்னால் வந்த வேனின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கியது. இதில் வேனை ஓட்டி வந்த சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் கார்த்திக் (25) என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடினார்.
இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் மற்றும் வாகன ஓட்டிகள் உடனடியாக ஓடிவந்து, சுமார் 15 நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு இடிபாடுகளில் சிக்கியிருந்த கார்த்திக்கை மீட்டனர். பின்னர் அவர் சிகிச்சைக்காகத் தாம்பரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் கார்த்திக் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
உயிரிழந்த கார்த்திக்கிற்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. தற்போது அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், கணவர் விபத்தில் உயிரிழந்த செய்தி குடும்பத்தினரிடையே பேரிடியாக இறங்கியுள்ளது.
இந்த கோர விபத்தில் வேனில் இருந்த பல ஆயிரம் முட்டைகளுக்கு எந்தவித சேதமும் ஏற்படாமல் அப்படியே தப்பிய நிலையில், அதை ஓட்டி வந்த இளம் ஓட்டுநர் கார்த்திக் மட்டும் உயிரிழந்த நிகழ்வு சம்பவ இடத்திற்கு வந்தவர்களைக் கண் கலங்கச் செய்தது.
இவ்விபத்து குறித்துத் தகவல் அறிந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
