
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே கடலுக்குள் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதற்கு தமிழக அரசு எக்காரணம் கொண்டும் அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தியும் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மீன்பிடி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ரூ.425 கோடி மதிப்பிலான திட்டம்:
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே சுமார் 18.7 கிலோமீட்டர் தொலைவில், ஆழ்கடல் பகுதியில் ₹425 கோடி மதிப்பீட்டில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள ‘ஹிந்துஸ்தான் ஆயில் நிறுவனம்’ விண்ணப்பித்திருந்தது. இந்த விண்ணப்பத்தை ஏற்று, மத்திய மோடி தலைமையிலான அரசு இத்திட்டத்திற்கு அண்மையில் அனுமதி வழங்கியுள்ளது.
வாழ்வாதாரம் பாதிக்கும் என அச்சம்:
மத்திய அரசின் இந்த நடவடிக்கை கடலோர மீனவ மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தால் கடல் வளம் முற்றிலும் அழிவதோடு, தங்களின் வாழ்வாதாரமும், மீன்பிடி தொழிலும் கடுமையாகப் பாதிக்கப்படும் என மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆட்சியர் அலுவலகம் முன் முழக்கம்:
இத்திட்டத்தை உடனடியாகக் கைவிடக் கோரியும், தமிழ்நாட்டு எல்லையில் இத்திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு எவ்வித அனுமதியும் அளிக்கக் கூடாது என வலியுறுத்தியும் கடலூர் மாவட்ட மீன்பிடி தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பாலு தலைமை தாங்கினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்கள் மற்றும் மீனவப் பெண்கள் திரளாகக் கலந்துகொண்டு, மத்திய அரசுக்கு எதிராகவும், திட்டத்தைத் தடுக்கக் கோரி தமிழக அரசுக்கு வலியுறுத்தியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இப்போராட்டம் காரணமாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
