பாட்டாளி மக்கள் கட்சி வரும் ஜூலை 16-ஆம் நாள் 37 ஆண்டுகளை நிறைவு செய்து, 38-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி, கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தொண்டர்களுக்கு வாழ்த்து மடல் ஒன்றை எழுதியுள்ளார். அதில், பா.ம.க-வின் சாதனைகள், தேர்தல் கள நிலவரம் மற்றும் கட்சியின் அடுத்தகட்ட இலக்குகள் குறித்து அவர் விரிவாகப் பகிர்ந்துள்ளார்.


சாதனைகளின் இயக்கம்
அன்புமணி இராமதாஸ் தனது மடலில் குறிப்பிட்டிருப்பதாவது:
சமூகநீதிப் பயணம்: பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்திற்காகவும் மது ஒழிப்பிற்காகவும் 1989-இல் மருத்துவர் அய்யா அவர்களால் தொடங்கப்பட்ட பா.ம.க, அவர் காட்டிய பாதையில் தொய்வின்றி பயணிக்கிறது.
இட ஒதுக்கீடு சாதனைகள்: சுதந்திர இந்தியாவின் 78 ஆண்டுக்கால ஜனநாயக அரசியலில், நாடு முழுவதும் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் பயனடையும் வகையில் 6 முக்கிய இட ஒதுக்கீடுகளை வென்றெடுத்துக் கொடுத்த ஒரே இயக்கம் பா.ம.க தான்.
அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட வெற்றி: ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்கள் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வலிமை பெற்று, தமிழக அரசியலில் பா.ம.க தவிர்க்க முடியாத சக்தியாகத் திகழ்கிறது.
தேர்தல் முடிவுகளும் மக்கள் பணியும்
கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசிய அவர், “எதிர்பாராத அலை காரணமாக தேர்தல் முடிவுகள் மாறினாலும், பா.ம.க வலுவாக உள்ள பகுதிகளில் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு நமது உழைப்பே காரணமாக அமைந்தது. நாம் பெற்ற 4 இடங்கள், தற்போதைய சூழலில் 40 இடங்களுக்குச் சமமானது” என்று குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலுக்குப் பின்பும் பா.ம.க ஓய்வின்றி உழைத்து வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், சட்டமன்றத்தில் பா.ம.க எழுப்பிய குரலின் காரணமாகவே ‘தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே (சாதிவாரி கணக்கெடுப்பு) நடத்தப்படும்’ என்ற அறிவிப்பு ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ளது பாட்டாளிகளுக்குக் கிடைத்த பெரும் மனநிறைவு என்றார். மேலும், விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் மேகதாது அணைக்கு எதிராக பிலிகுண்டுலு முதல் பூம்புகார் வரை தான் நடத்திய விழிப்புணர்வுப் பயணம் இளைய தலைமுறையினரிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதையும் அவர் நினைவு கூர்ந்தார்.
38-ஆம் ஆண்டு: புதிய தொடக்கம்
”மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் நிலையிலிருந்து, மக்களின் தேவைகளை நேரடியாக நிறைவேற்றிக் கொடுக்கும் நிலையை (ஆட்சியை) எட்ட வேண்டும் என்பதே மருத்துவர் அய்யா அவர்களின் கனவு. அதற்கு இந்த 38-ஆம் ஆண்டு ஒரு புதிய தொடக்கமாக அமையும்” என்று அன்புமணி இராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஜூலை 16 அன்று தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள அனைத்துக் கிளைகளிலும் கட்சியின் கொடியேற்றி, பொதுக்கூட்டங்கள் நடத்தி பா.ம.க-வின் 38-ஆம் ஆண்டு தொடக்க விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுமாறு தொண்டர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
