மதுரை மாநகராட்சி அலுவலகம் முன்பாக, கழிவுநீரைக் கொண்டு வந்து குளிக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட முயன்ற பெண் கவுன்சிலர் மற்றும் அவரது கணவர் உள்பட 10 பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். போராட்டம் நடத்துவதற்காக அவர்கள் கொண்டு வந்திருந்த சாக்கடை கழிவுநீர் டேங்குகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மதுரை மாநகராட்சியின் 20-வது வார்டுக்கு உட்பட்ட விளாங்குடி பகுதியில் நீண்ட நாட்களாக பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படவில்லை என்றும், சொக்கநாதபுரம் 1-வது தெருவில் கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரப்படாமல் சுகாதார சீர்கேடு நிலவி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
மாநகராட்சி முன் நூதன போராட்டம்
இதனால் ஆத்திரமடைந்த 20-வது வார்டு கவுன்சிலர் நாகஜோதி சித்தன், தனது வார்டு பகுதி மக்களுடன் இணைந்து மதுரை மாநகராட்சி அலுவலகம் முன்பு ஒரு நூதன போராட்டத்திற்கு திட்டமிட்டார். தங்களது பகுதி சாக்கடை கழிவுநீரை டிரம் மற்றும் டேங்குகளில் கொண்டு வந்து, அதைக் தலையில் ஊற்றி குளிக்கும் போராட்டத்தில் ஈடுபட அவர்கள் முயன்றனர். இன்று காலை மாநகராட்சி அலுவலக வாயில் முன்பு கவுன்சிலர் நாகஜோதி சித்தன், அவரது கணவர் சித்தன் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் தடியடி நடத்தி கைது – டேங்குகள் பறிமுதல்
முன்னெச்சரிக்கையாக அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தல்லாகுளம் காவல்துறையினர், போராட்டக்காரர்களை உடனடியாகத் தடுத்து நிறுத்தினர். குளிப்பதற்காக அவர்கள் வாகனங்களில் கொண்டு வந்திருந்த சாக்கடை கழிவுநீர் டேங்குகளைப் போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக பெண் கவுன்சிலர் நாகஜோதி, அவரது கணவர் சித்தன் மற்றும் பொதுமக்கள் உட்பட 10 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
பகுதியில் நீடிக்கும் பரபரப்பு
மக்கள் பிரதிநிதியான பெண் கவுன்சிலரே தனது வார்டு மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளுக்காக மாநகராட்சி அலுவலகம் முன்பு சாக்கடையில் குளிக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்றதும், அவர் கைது செய்யப்பட்டதும் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
