“தேசிய கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது என்பதை ஆளுநர் உணர வேண்டும்” என்றும், “வர்ணாசிரம தர்மத்தின் அங்கமான குருகுலக் கல்வி முறையை ஆதரித்துப் பேசியதற்காக ஆளுநர் தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ப. மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், “தேசிய கல்விக் கொள்கை என்பது காலனித்துவ சிந்தனையில் இருந்து இந்திய கல்வியை விடுவிக்கும் முயற்சி. இதில் திருத்தங்கள் கோரலாமே தவிர, செயல்படுத்தாமல் இருப்பது சரியல்ல. அத்துடன் பாரம்பரிய குருகுலக் கல்வி முறையைச் செயல்படுத்த முடியவில்லையே” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
ஆளுநரின் இந்த பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து மாணிக்கம் தாகூர் எம்.பி. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு,

கல்வி உரிமையைச் சிதைக்கும் பா.ஜ.க. அரசு
மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தது முதல், பண்டிட் நேரு காலம் தொட்டு காங்கிரஸ் ஆட்சியில் கட்டமைக்கப்பட்ட கல்வி முறையைச் சிதைத்து, சின்னாபின்னமாக்கி வருகிறது. ‘அனைவருக்கும் கல்வி’ என்பதே காங்கிரஸ் அரசின் நோக்கமாக இருந்தது. ஆனால், பா.ஜ.க. ஆட்சியில் ‘தகுதி, தரம், தேசியம், தேசபக்தி’ என்ற பெயரில் ஒருசாராருக்கு மட்டுமே கல்வியைச் சொந்தமாக்க நினைக்கிறது. ‘பாகுபாடும், பாசிசமும்’ பா.ஜ.க.வின் அடிப்படை கொள்கையாக இருப்பதே இதற்கு முக்கியக் காரணம் ஆகும்.
மாநில உரிமைகளில் தலையிடுவதா?
கல்வி என்பது பொதுப்பட்டியலில் உள்ள ஒரு துறை. மாநில அரசுகள் தங்களது பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை வெற்றிகரமாக நடத்தி வருகின்றன. ஆனால், மாநில அரசுகளைக் கலந்தாலோசிக்காமல், தன்னிச்சையாகத் தனது ஆர்.எஸ்.எஸ். வெறுப்பையும் அடிப்படைவாதத்தையும் திணிக்கும் நோக்கில் தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதை தமிழ்நாடு ஏற்க வேண்டும் என ஆளுநர் அர்லேகர் பேசுவது கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டின் கல்வி உரிமையில் மூக்கை நுழைப்பதை ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆளுநர் என்பவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் கொள்கைகளைத் தான் பேச வேண்டும்.

முன்னாள் ஆளுநர் ரவி வழியில் அர்லேகரா?
”முந்தைய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டின் உணர்வுகளுக்கு எதிராகச் செயல்பட்டு உச்ச நீதிமன்றம் வரை சென்று ‘குட்டு’ வாங்கியவர். அதிலிருந்து பாடம் கற்காமல் ஆர்.என்.ரவி காட்டிய பாதையிலேயே தற்போதைய ஆளுநர் அர்லேகரும் செல்வது சரியல்ல. அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்துவது, சந்தடி சாக்கில் தேசிய கல்விக் கொள்கையைத் திணிக்கப் பார்ப்பது போன்ற ‘அதிகார அத்துமீறல்களை’ ஆளுநர் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டிற்கு எந்த கல்விக் கொள்கை தேவையோ அதை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசு பார்த்துக் கொள்ளும். அதுபற்றி ஆளுநரோ, தமிழ்நாட்டு மக்களால் விரட்டியடிக்கப்பட்ட பா.ஜ.க.வோ கவலைப்படத் தேவையில்லை.”
மன்னிப்பு கேட்க வேண்டும்!
ஆளுநர் ஆதரித்துப் பேசியுள்ள குருகுலக் கல்வி முறை என்பது வர்ணாசிரம தர்மத்தின் ஓர் அங்கமாகும். சமத்துவத்திற்கு எதிரான வர்ணாசிரம தர்மத்தை வலியுறுத்தி ஆளுநர் பேசியிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த பிற்போக்குத்தனமான பேச்சுக்காக அவர் உடனடியாகத் தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று தனது அறிக்கையில் மாணிக்கம் தாகூர் எம்.பி. மிகக் காரசாரமாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்: இதுவரை 66% இடங்கள் நிரம்பின! – மாணவிகள் சேர்க்கை அதிகம்
