தமிழகத்தில் மூடப்பட்ட மணல் குவாரிகளை மீண்டும் திறக்க தமிழக அரசு எடுத்து வரும் முடிவுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காவிரி பாசன மாவட்டங்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, அதை பாலைவனமாக்குவதில் கர்நாடக அரசுடன் தமிழக அரசு போட்டி போடக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
மீண்டும் திறக்கப்படும் மணல் குவாரிகள் – அதிர்ச்சி தரும் முடிவு:
“தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனையைத் தொடர்ந்து மூடப்பட்ட மணல் குவாரிகளில், 10 முதல் 12 குவாரிகளை மீண்டும் திறக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. சுற்றுச்சூழலை சீர்குலைப்பது, மணல் கொள்ளையை ஊக்குவிப்பது என இரட்டைத் தீமைகளை இழைப்பவை மணல் குவாரிகள் என்பதை அறிந்தும், அவற்றை மீண்டும் திறக்க அரசு முற்படுவது அதிர்ச்சியளிக்கிறது.
இப்பொழுது திறக்கப்படவுள்ள குவாரிகள் பெரும்பாலும் காவிரி பாசன மாவட்டங்களிலும், அதையொட்டிய பகுதிகளிலும் அமையவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செயற்கைக்கோள் கண்காணிப்பு சாத்தியமற்றது:
கட்டுமான மணல் தட்டுப்பாட்டைப் போக்கவே இந்த முடிவு என்றும், அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவதைத் தடுக்க குஜராத் விண்வெளி பயன்பாட்டு அமைப்பின் (BISAG-N) செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்கப்படும் என்றும் அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், செயற்கைக்கோள் கண்காணிப்பு மூலம் மணல் கொள்ளையைத் தடுப்பது சாத்தியமல்ல. கட்டுமான மணல் தட்டுப்பாட்டைப் போக்க, வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்வது உள்ளிட்ட பல்வேறு மாற்று வழிகள் உள்ளன.
பாலைவனமாகும் காவிரி மாவட்டங்கள்:
அரசின் புள்ளிவிவரங்களின்படி, கட்டுமானப் பணிகளுக்கு தினமும் 60 ஆயிரம் சரக்குந்து மணல் தேவைப்படுகிறது. செயற்கை மணல் (M-Sand) போக மீதமுள்ள தேவையை இந்த குவாரிகள் மூலம் பூர்த்தி செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, புதிதாக திறக்கப்படும் குவாரிகளில் இருந்து ஒரு நாளைக்கு சராசரியாக 2,083 சரக்குந்துகளில் மணல் அள்ளப்படும். இதனால், ஓராண்டுக்கு சுமார் 2.74 கோடி யூனிட் மணல் எடுக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால் ஒட்டுமொத்த காவிரி பாசன மாவட்டங்களும் பாலைவனமாகி விடும். இந்த சூழலியல் சீரழிவை எக்காரணம் கொண்டும் சரி செய்யவே முடியாது.
கர்நாடக அரசுடன் போட்டி போடக் கூடாது:
மேகதாது அணையைக் கட்டுவதன் மூலம் தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைப்பதைத் தடுத்து, காவிரி பாசன மாவட்டங்களைப் பாலைவனமாக்க கர்நாடக அரசு துடிக்கிறது. அதேபோல், தமிழக அரசு மணல் குவாரிகளைத் திறந்தாலும் இப்பகுதிகள் பாலைவனமாகி விடும். எனவே, காவிரி பாசன மாவட்டங்களை அழிப்பதில் கர்நாடக அரசுடன் தமிழக அரசு போட்டி போடக் கூடாது.
உடனடியாக 12 மணல் குவாரிகளைத் திறக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். மேலும், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் குறைந்தது 5 கிலோமீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
