தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடையே கடுமையான வார்த்தைப்போர் வெடித்துள்ளது. “அதிமுகவும் திமுகவும் கூட்டு களவாணிகள்” என்று கரூரில் முதலமைச்சர் விஜய் விமர்சித்ததற்கு, எடப்பாடி பழனிசாமி சேலத்தில் மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார்.


இது தொடர்பாக சேலம் மாவட்டம் ஓமலூரில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“இரவல் வாங்கி நடக்கும் ஆட்சி” – இபிஎஸ் சாடல்:
“தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்து 60 நாட்கள் ஆகிவிட்டது. இதுவரை இந்த அரசு ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யவில்லை; முதல்வர் விஜய் வெறும் பஞ்ச் டயலாக் பேசிக்கொண்டிருக்கிறார். அதிமுக சின்னத்தில் வென்று, தவெகவுக்குச் சென்ற எம்.எல்.ஏ-க்களை விஜய் களவாடி (திருடி) வைத்துள்ளார். பிற கட்சி எம்.எல்.ஏ-க்களை இரவல் வாங்கித்தான் அவர் ஆட்சி நடத்துகிறார். அப்படிப்பட்ட விஜய்தான் எங்களை கூட்டு களவாணி என்கிறார். நிஜமான களவாணி அவர்தான்!
நான்கு கால்கள் இருந்தால்தான் நாற்காலி நிற்கும். ஆனால் தவெக ஆட்சி 2 கால்கள் கொண்ட நாற்காலி போல் தடுமாறுகிறது. முதலமைச்சர் என்ற அந்தஸ்துக்கே விஜய் இன்னும் வரவில்லை. கரூரில் அவர் பேசிய பேச்சுக்கள் மிகவும் மோசமானவை. அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு தவெகவுக்குச் சென்றவர்களுக்கு விஜய் அல்வா கொடுத்துவிட்டார்.
திமுக தீயசக்தி என்பதில் மாற்றமில்லை:
அதிமுக – திமுக கூட்டு என்பது முழுக்க முழுக்க கட்டுக்கதை. திமுக தீயசக்தி என்று கூறித்தான் எம்.ஜி.ஆர் கட்சியைத் தொடங்கினார். அந்த நிலைப்பாட்டில் எனக்கும், அதிமுகவுக்கும் இப்போதும் எந்த மாற்றமும் இல்லை. காவிரி நீருக்காக உச்ச நீதிமன்றத்தில் போராடித் தீர்ப்பைப் பெற்றது அதிமுகதான். ஆனால், மேகதாது அணை விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையில்லை என விஜய் அரசு மெத்தனம் காட்டுகிறது. மேலும், ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படைத் திட்டம் கொண்டுவந்துள்ளனர். ஆனால், இரவில் ஒரு பிரச்சினை என்றால் அங்கு வரும் அந்தப் பெண்களுக்கு யார் பாதுகாப்பு அளிப்பது?
திமுக கூட்டணியில் வென்ற காங்கிரஸ், சுயலாபத்திற்காக தவெக கூட்டணி அரசில் இணைந்துள்ளது” என்று எடப்பாடி பழனிசாமி மிகக் காரசாரமாகப் பேசினார்.
“பீஸ் பீஸாகும் அதிமுக… குபீர் சிரிப்பு காமெடி!” – தவெக ஐடி விங் பதிலடி:
எடப்பாடி பழனிசாமியின் இந்த கடுமையான விமர்சனத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஐடி விங் உடனே தங்களது எக்ஸ் பக்கத்தில் பதிலடி கொடுத்துப் பதிவிட்டுள்ளது.
அதில், “சொந்தக் கட்சி நடக்கிறதா, கட்சியை நாம் நடத்துகிறோமா என்பதே தெரியாதவர், இங்கு ஆட்சி நடக்கிறதா என்று கேட்பது வேடிக்கையாக இருக்கிறது. திமுகவுடன் சேர்ந்து கூட்டுக்களவாணி ஆட்சி அமைக்க இரவில் சந்தித்துத் திட்டம் போட்டவர், மனசாட்சி உள்ள மக்கள் ஆட்சியைப் பார்த்து ‘இரவல் ஆட்சி’ என்று கூறுவது அடக்க முடியாத சிரிப்பையே வரவழைக்கிறது.
கொடநாடு கொலை வழக்கு பற்றிப் பேசினாலே நடுங்குபவர்கள் எல்லாம், தவெக அரசைப் பற்றிக் குறை கூறுவது குபீர் சிரிப்பு காமெடி. சொந்தக் கட்சியே பீஸ் பீஸாகி வருவது தெரியாமல், இப்படி காமெடியாகப் பேட்டி தருவதை விடுத்து, முதலில் தன் கட்சியைக் காப்பாற்றும் வேலையைப் பார்க்கட்டும்” என தவெக ஐடி விங் மிகத் தீவிரமாகப் சாடியுள்ளது.
முதலமைச்சர் விஜய் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையேயான இந்த ‘களவாணி’ வார்த்தை மோதல் தமிழக அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
