தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தொடர்ந்து உண்மைக்கு மாறாகவும், கீழ்த்தரமான முறையிலும் பேசி வருவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி குற்றம் சாட்டியுள்ளார். அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விஜய்யின் அரசியல் நகர்வுகள் மற்றும் விமர்சனங்களுக்குக் கடுமையான பதிலடி கொடுத்தார்.

“குதிரை பேர ஊழலுக்குப் போதிய ஆதாரங்கள் உள்ளன”
செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆர்.எஸ். பாரதி, “விஜய் குதிரை பேரத்தில் ஈடுபட்டார் என்பதற்கான புகாரைக் கடந்த 4-ஆம் தேதியே ஆளுநரிடம் திமுக சார்பில் அளித்துள்ளோம். வைகோவின் பேச்சை அடிப்படையாக வைத்து அந்தப் புகார் கொடுக்கப்பட்டது. அதேபோல், தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜய்பாஸ்கரும் செய்தியாளர்கள் சந்திப்பில் இது குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். இவையெல்லாம் குதிரை பேர ஊழல் நடந்திருப்பதற்கு மிகத் தகுந்த ஆதாரங்கள் ஆகும். இதனைச் சுட்டிக்காட்டித்தான் திமுக சார்பில் ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

எச்சை இலை விமர்சனமும், கொத்து பரோட்டா பதிலும்
தொடர்ந்து விஜய்யை விமர்சித்த அவர், “விஜய் தொடர்ந்து உண்மைக்கு மாறான விஷயங்களைப் பேசி வருகிறார். கொளத்தூரில் ‘கொத்து பரோட்டா’ என அவர் மிகவும் கீழ்த்தரமான முறையில் பேசியுள்ளார். இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியே இன்று தெளிவாகப் பதில் சொல்லியிருக்கிறார். நாங்கள் சாப்பிட்டுப் போட்ட எச்சை இலையை வைத்துத்தான் அவர்கள் விழா நடத்துகிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். விஜய் இனிமேலும் இப்படி கீழ்த்தரமாகப் பேசினால், நாங்களும் அதே பாணியில் பதில் பேச வேண்டி வரும்” என எச்சரித்தார்.
”செத்த பாம்பை அடித்துவிட்டோம்…” – கூட்டணித் தலைவர்கள் குறித்த வியூகம்
கூட்டணியில் இருந்து வெளியேறிய கட்சித் தலைவர்கள் குறித்த கேள்விக்கு ஆர்.எஸ். பாரதி பதிலளிக்கையில்:
”இனிமேல் எங்களது கூட்டணியில் இருந்து சென்ற கட்சித் தலைவர்கள் குறித்துப் பேசப் போவதில்லை. அவர்களுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தால், மக்கள் சார்ந்த முக்கியமான பிரச்சினைகள் பேசப்படாமல் திசை திரும்பி விடுகிறது. கடந்த தேர்தலின்போது இப்படித்தான் ‘செத்த பாம்பை’ (அதிமுக) அடித்துவிட்டு, ‘கருநாகத்தை’ (பாஜக) கோட்டையில் விட்டுவிட்டோம். அந்தத் தவறை இந்த முறை மீண்டும் செய்ய மாட்டோம்.”
மேலும், “இன்னும் ஆறு மாதங்களில் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்” என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “அனிதா ராதாகிருஷ்ணன் தனது தனிப்பட்ட விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்” என்று கூறி ஆர்.எஸ். பாரதி தனது பேட்டியை நிறைவு செய்தார்.
