“விஜய் நடத்துவது அப்பட்டமான குதிரை பேரம்!” – கொதிக்கும் தமிழக அரசியல் களம்: சி.பி.ஐ. வீரபாண்டியன் அதிரடி குற்றச்சாட்டு; அலிம் அல் புகாரி நேர்காணல் பின்னணி!


தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் அவர்கள் தலைமையில் புதிய அரசு அமைந்துள்ள சூழலில், ஆளும் தவெக அரசுக்கு எதிராகப் பாயும் “குதிரை பேரம்” குற்றச்சாட்டுகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளித்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) தற்போது ஆளும் தரப்புக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது பரப்பரப்பை ஏற்றியுள்ளது.
“தமிழகத்திற்குள் நுழையும் வடமாநிலக் கலாச்சாரம்” – வீரபாண்டியன் சாடல்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தவெக அரசு சட்டமன்ற உறுப்பினர்களைத் தக்கவைக்கக் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டினார். தமிழகத்தில் தற்போது அப்பட்டமான குதிரை பேரம் அரங்கேறி வருகிறது என்றும், அதற்கு நாமெல்லாம் சாட்சியாக இருந்து கொண்டிருக்கிறோம் என்றும் அவர் வேதனை தெரிவித்தார். வட இந்திய மாநிலங்களில் மட்டுமே நாம் பார்த்து வந்த இத்தகைய கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரம், தற்போது படிப்படியாகத் தமிழகத்திற்கும் பரவி வருவது தமிழ்நாட்டின் அரசியல் ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல என்று குறிப்பிட்ட அவர், உடனடியாக இது தடுக்கப்பட வேண்டும் என்றார்.
மேலும், மக்கள் ஒரு கட்சியின் கொள்கை மற்றும் சின்னத்தை நம்பி வாக்களித்துள்ள நிலையில், அவர்களின் விரல்களில் வைக்கப்பட்ட தேர்தல் மை கூட இன்னும் அழியாததற்குள் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறுவது ஜனநாயகப் படுகொலை மற்றும் வாக்காளர்களுக்கு இழைக்கும் அப்பட்டமான துரோகம் என்று சாடினார். தவெக அரசுக்கு இ.கம்யூனிஸ்ட் வெளியிலிருந்து ஆதரவளிப்பது ஆளுநர் ஆட்சியைத் தவிர்ப்பதற்கும், ஜனநாயகத்தைக் காப்பதற்கும் தானே தவிர, விஜய்க்காக அல்ல என்று தெளிவுபடுத்திய அவர், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களில் தங்களின் பலத்தை நிரூபிக்கக் கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டியிடும் என்றும் அதிரடியாக அறிவித்தார்.
ஆளுநர் மாளிகையில் குவிகிறது புகார்கள்: திமுக, அதிமுக கூட்டு நடவடிக்கை
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், தவெகவினர் தங்களை அணுகியதாகப் பேசிய விவகாரத்தை மையமாக வைத்து, ஆளுநரிடம் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தவெக அரசுக்கு எதிராகக் குதிரை பேரப் புகாரை அளித்துள்ளன. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கியிருந்த இடத்திற்கே நேரடியாகச் சென்று முதல்வர் விஜய் பேரங்கள் பேசியதன் பின்னணியிலேயே எம்.எல்.ஏ-க்கள் தவெக பக்கம் சாய்ந்ததாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. திமுகவின் வழக்கறிஞர் அமைப்பும் உச்ச நீதிமன்ற வழிகாட்டலின் படி ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் விசாரணைக் குழு மற்றும் சி.பி.ஐ விசாரணை கோரி ஆளுநரிடம் முறைப்படி மனு அளித்துள்ளது.
”கழுத்து மேல ஒரே அடி” – அரசியல் ஆய்வாளர் அலிம் அல் புகாரி அதிரடி
இந்தக் குதிரை பேர விவகாரம் குறித்துப் பிரபல அரசியல் ஆய்வாளரும் ஊடகவியலாளருமான அலிம் அல் புகாரி (Alim Al Buhari) வழங்கிய நேர்காணல் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை எழுப்பியுள்ளது.
அலிம் அல் புகாரி தனது நேர்காணலில், தவெகவினர் ஆளுநர் மாளிகையோடு மிகுந்த இணக்கமாக இருப்பதன் பின்னணியில் ஏதோ ஒரு ரகசிய உடன்பாடு (டீல்) இருப்பதாகக் குறிப்பிட்டார். குதிரை பேர புகார்களில் தற்போது அமலாக்கத்துறை (ED) ஹவாலா பணப் பரிவர்த்தனை வழக்குகளைக் கையில் எடுத்துள்ளதாகவும், வெறும் வாய்ப் பேச்சுடன் இது முடிந்துவிடாமல், இதற்கான சட்ட ரீதியான நகர்வுகளும் வழக்குகளும் வேகமாகத் தயாராகி வருவதாகவும் கூறினார்.
தவெக இன்னும் ஒரு தேர்தல் மனநிலையிலேயே சுழல்கிறது என்று சுட்டிக்காட்டிய அவர், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் போன்ற நீண்ட அரசியல் முதிர்ச்சி கொண்ட தலைவர்களின் மாண்புகளைப் புரிந்து கொள்ளாமல், குறுக்கு வழியில் ஆட்சியைத் தக்கவைக்க நினைப்பது இறுதியில் அசிங்கப்படவே வழிவகுக்கும் என்று தனது நேர்காணலில் ஆணித்தரமாகப் பதிவு செய்துள்ளார்.
அதிகாரப் போட்டியில் தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் எம்.எல்.ஏ-க்கள் கட்சித் தாவல்களும், அதற்குப் பின்னால் இருக்கும் கோடிக் கணக்கான பணப் பரிவர்த்தனை குற்றச்சாட்டுகளும் தமிழக அரசியலை தேசிய அளவில் உற்றுநோக்க வைத்துள்ளன. இடதுசாரிகள் மற்றும் திமுக கூட்டணியின் இந்த அதிரடித் தாக்குதல்களைத் தவெக அரசு எவ்வாறு சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்ளப் போகிறது என்பதே தற்போதைய பிரதான கேள்வி!
