மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு; இதுவரை 41,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பம்…


நடப்பு கல்வியாண்டிற்கான (2026-2027) எம்.பி.பி.எஸ் (MBBS) மற்றும் பி.டி.எஸ் (BDS) போன்ற மருத்துவப் படிப்புகளில் சேருவதற்குக் கூடுதல் அவகாசம் வழங்கி மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஜூலை 23-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மற்றும் மேலாண்மை ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு கடந்த சில நாட்களாக இணையவழியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவடைய இருந்த நிலையில், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தகுதியான தகுதியுடைய மாணவர்கள் வரும் ஜூலை 23-ஆம் தேதி மாலை 5.00 மணி வரை மருத்துவக் கல்வி இயக்ககத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களின் வாயிலாகத் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

41,000 விண்ணப்பங்கள் குவிந்தன
இந்த ஆண்டு மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக மாணவர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கிய நாள் முதல் தற்போது வரை சுமார் 41,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்ககம் புள்ளிவிவரத் தகவலை வெளியிட்டுள்ளது. அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், வரும் நாட்களில் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை மேலும் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தரவரிசைப் பட்டியல் எப்போது?
விண்ணப்ப விநியோகம் முழுமையாக நிறைவடைந்த பிறகு, மாணவர்களின் நீட் (NEET) தேர்வு மதிப்பெண்கள் மற்றும் இடஒதுக்கீடு விதிகளின் அடிப்படையில் தகுதியானவர்களின் தரவரிசைப் பட்டியல் (Rank List) தயாரிக்கப்படும். ஆகஸ்ட் முதல் வாரத்தில் அதிகாரப்பூர்வத் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, அதன்பின்னர் கலந்தாய்வு (Counselling) தேதிகள் அறிவிக்கப்படும் எனத் துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் சான்றிதழ் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை எவ்விதத் தவறும் இன்றி கடைசி நேரப் பதற்றத்தைத் தவிர்க்க முன்னதாகவே முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நகராட்சி நிர்வாகத்துறையில் 50-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து
