காவிரி பாசன மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு அனுப்பப்படாமல் முடங்கிக் கிடப்பதால், கொள்முதல் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கவலை தெரிவித்துள்ளார். உழவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க, அரசு உடனடியாகப் போர்க்கால அடிப்படையில் நெல் மூட்டைகளை அகற்றி கொள்முதலை வேகப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
நெல் கொள்முதல், அன்புமணி இராமதாஸ், பாமக அறிக்கை, நெல் முடக்கம், தமிழ்நாடு அரசு, டெல்டா விவசாயிகள், கொள்முதல் நிலையம், விவசாயப் பிரச்சனை
முடங்கிய கோடைப்பருவ நெல் கொள்முதல்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, ”தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில், கடந்த ஏப்ரல் மாதத்தில் சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கோடைப்பருவ நெல் சாகுபடி தொடங்கப்பட்டது. நிலத்தடி நீரைக் கொண்டு சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணி ஜூன் இறுதியில் தொடங்கியது. தற்போது பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் அறுவடை முடிந்துவிட்ட நிலையில், இப்பணி ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறுவடை செய்யப்படும் நெல்லைக் கொள்முதல் செய்ய காவிரி பாசன மாவட்டங்கள் முழுவதும் 800-க்கும் மேற்பட்ட கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், கடந்த 10 நாட்களுக்கும் மேலாகக் கொள்முதல் பணி முற்றிலும் முடங்கிக் கிடக்கிறது.

சங்கிலித் தொடர் அறுபட்ட நிர்வாக அலட்சியம்
வழக்கமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள், உடனடியாகக் கிடங்குகளுக்கும், அங்கிருந்து அரவை ஆலைகளுக்கும் சங்கிலித் தொடர் போல அனுப்பி வைக்கப்பட வேண்டும். ஆனால், அரசு நிர்வாகத்தின் போதிய திட்டமிடல் இல்லாததால் இந்த சங்கிலித் தொடர் அறுபட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களிலேயே தேங்கிக் கிடக்கின்றன. போதிய இடவசதி இல்லை என்ற காரணத்தைக் காட்டி புதிய கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், விற்பனை செய்ய முடியாமல் உழவர்கள் கொண்டு வந்த நெல் மூட்டைகளும் திறந்தவெளியில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
மழையில் நனையும் அபாயம்
காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்தவெளியில் தான் அமைந்துள்ளன. தற்சமயம் ஒவ்வொரு நிலையத்திலும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன.தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், எதிர்பாராத விதமாக மழை பெய்தால் உழவர்கள் அரும்பாடுபட்டு விளைவித்த நெல் மூட்டைகள் அனைத்தும் வீணாகிவிடும் அபாயம் எழுந்துள்ளது. ஆனால், இதுகுறித்த கவலை அரசுக்கும், அதிகாரிகளுக்கும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.
தற்காலிக கிடங்குகளை அமைக்காதது ஏன்?
கடந்த ஆண்டு குறுவை மற்றும் சம்பா பருவத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் இன்னும் கிடங்குகளில் தேங்கியிருப்பதும், அரவை ஆலைகளால் கூடுதல் நெல்லைக் கையாள முடியாததுமே இந்தச் சிக்கலுக்குக் காரணம் என உழவர் அமைப்புகள் கூறுகின்றன. அப்படியென்றால், கோடைப்பருவ நெல்லை எவ்வாறு கையாள்வது என்பதற்கான மாற்றுத் திட்டத்தை அரசு முன்னரே வகுத்திருக்க வேண்டும். தற்காலிக நடவடிக்கையாகத் திருமண மண்டபங்கள் போன்ற இடங்களையாவது வாடகைக்கு எடுத்து தற்காலிகக் கிடங்குகளாக மாற்றியிருக்கலாம். ஆனால், தமிழக அரசு அத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளவில்லை.
போர்க்கால நடவடிக்கை தேவை
கடந்த ஆண்டு குறுவைப் பருவத்தில் கொள்முதல் செய்யப்படாததால், லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணான துயரத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த இழப்பிலிருந்தே இன்னும் மீளாத உழவர்களுக்கு மீண்டும் அதேபோன்ற ஒரு சோதனை வரக் கூடாது. எனவே, தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு, கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளைக் கிடங்குகளுக்குப் போர்க்கால அடிப்படையில் மாற்ற வேண்டும். கிடங்குகளில் உள்ள மூட்டைகளை விரைவாக அரவை ஆலைகளுக்கு அனுப்ப வேண்டும். கொள்முதல் நிலையங்களில் எவ்விதத் தடையுமின்றி நெல் கொள்முதல் தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.”இவ்வாறு பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
