தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைத்துள்ள தவெக அரசு, தங்களுக்கு எதிரான விமர்சனங்களை ஒடுக்க ஊடகவியலாளர்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்த முயல்வதாகவும், ஊடக சுதந்திரத்தில் தேவையற்ற தலையீடுகளைச் செய்வதாகவும் மூத்த பத்திரிகையாளர் மதன் அறிவழகன் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இணைய ஊடக நேர்காணல் ஒன்றில், பத்திரிகையாளர் விஜயன் கைது நடவடிக்கை மற்றும் தவெக அரசின் ஊடக அணுகுமுறை குறித்து அவர் பகிர்ந்துள்ள செய்தி விவரங்கள் வருமாறு:

பத்திரிகையாளர் விஜயன் கைது விவகாரம்:
அண்மையில் பத்திரிகையாளர் விஜயன் அவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட விசாரணை மற்றும் கைது நடவடிக்கைகள் ஊடக உலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ”பத்திரிகையாளர் விஜயன் அவர்களைக் கைது செய்து இரண்டு நாட்கள் காவலில் வைத்துள்ளனர். இரவோடு இரவாக அவர்கள் கேட்ட விஷயங்களையெல்லாம் சொல்லச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர். நள்ளிரவு 2 மணிக்கு அவரை மீண்டும் அழைத்து, அவரது மொபைல் போனைப் பறிமுதல் செய்து, அடுத்த நாள் காலை முதல் இரவு வரை அமர வைத்துத் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.

’ஆட்சி கவிழ்ப்புச் சதி’ என்ற போர்வையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில் பல அரசியல் கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள் மற்றும் விருந்தினர்களுடன் தொடர்பில் இருப்பது இயல்பான ஒன்று. அதை விடுத்து, அரசியல் தொடர்புகளைக் காட்டி ஒரு பத்திரிகையாளரை இப்படி அச்சுறுத்துவது நியாயமற்றது” என்று மதன் அறிவழகன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகவியலாளர்கள் மத்தியில் நிலவும் அச்சம்:
தற்போதைய அரசியல் சூழலில் ஊடகவியலாளர்கள் ஒருவித மறைமுக அச்சத்தோடே பணியாற்ற வேண்டிய நிலை உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். முன்பு சுதந்திரமாகப் பேசிவிட்டு, எடிட்டிங்கில் தவறான வார்த்தைகளை நீக்கும் சூழல் இருந்தது. ஆனால் இப்போது விமர்சனம் என்றாலே தவெக அரசு அஞ்சுவதாகவும், தங்களுக்குப் பிடிக்காத கருத்துகளைப் பேசுபவர்களை எந்தக் காரணமும் இன்றி முடக்க நினைப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
முதலமைச்சர் தனிப்பிரிவு (CM Cell) செயல்பாடும் ஊடகக் கட்டுப்பாடும்:
அமைச்சர்களோ, அதிகாரிகளோ தங்களை யோக்கியர்களாகக் காட்டிக் கொள்ள தவறான அல்லது நெகட்டிவான செய்திகளை முதலமைச்சரின் பார்வைக்குக் கொண்டு செல்ல மாட்டார்கள் என்பதால், உண்மை நிலவரங்களை அறியவே ‘முதலமைச்சர் தனிப்பிரிவு’ (CM Cell) பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. அரசாங்கத்தின் குறைகளை ஊடகங்கள் சுட்டிக்காட்டும்போது, அதை முதலமைச்சர் பார்த்துவிடுவார் என்ற பயம் அதிகாரிகளுக்கு இருக்க வேண்டும்.
ஆனால் அதற்கு மாறாக, தவெக தரப்பில் இருந்து ஊடக நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு, “இந்தச் செய்தியின் டோனை (Tone) கொஞ்சம் மாற்றுங்கள், நியூட்ரலாக (Neutral) போடுங்கள், இந்த குறிப்பிட்ட வார்த்தையை நீக்கிவிடுங்கள்” என்று மறைமுக அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாக மூத்த பத்திரிகையாளர் சமஸ் அவர்களே குறிப்பிட்டிருப்பதை மதன் அறிவழகன் இந்த நேர்காணலில் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இந்தத் தலையீடுகள் நீடித்தால் பெயர்களைக் குறிப்பிட்டுச் சொல்ல நேரிடும் என சமஸ் எச்சரித்துள்ளதையும் அவர் நினைவு கூர்ந்தார்.
ஊடகங்களைச் சுதந்திரமாகச் செயல்பட விடுங்கள்:
”ஊடகங்களின் சுதந்திரத்தில் அரசு நிர்வாகம் தலையிடுவது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து. தவெக அரசும், முதலமைச்சர் விஜய் அவர்களும், அமைச்சர்களும் ஊடகங்களைத் தங்களின் போக்கில் சுதந்திரமாகச் செயல்பட விடுவதுதான் மக்களுக்கும் நல்லது, இந்த அரசுக்கும் நல்லது” என்று பத்திரிகையாளர் மதன் அறிவழகன் தனது நேர்காணலில் அழுத்தமாகத் தெரிவித்துள்ளார்.
