Homeசெய்திகள்தமிழ்நாடுதிருப்பத்தூர் தேர்தல் வழக்கு: வழக்கை திரும்பப் பெற அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக முன்னாள் அமைச்சர்...

திருப்பத்தூர் தேர்தல் வழக்கு: வழக்கை திரும்பப் பெற அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் முறையீடு!

-

- Advertisement -

திருப்பத்தூர் தொகுதி தேர்தல் தொடர்பான வழக்கை திரும்பப் பெற அனுமதிக்குமாறு திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்றத்தில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் முன்னதாக ஆணை பிறப்பித்திருந்தது.

திருப்பத்தூர்

we-r-hiring

இந்த ஆணையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே இடைக்காலத் தடை விதித்திருந்தது.

மூத்த வழக்கறிஞர் முறையீடு

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி, உச்சநீதிமன்றத்தில் வழக்கைத் திரும்பப் பெறுவது குறித்த கோரிக்கையை முன்வைத்தார். அப்போது அவர் பேசுகையில், “திருப்பத்தூர் தேர்தல் வெற்றியை எதிர்த்துத் தொடரப்பட்ட முதன்மை வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

எனவே, இந்தச் சூழலில் மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரிப்பதில் பொருளேதும் இல்லை. இதன் காரணமாக, இவ்வழக்கை முழுமையாகத் திரும்பப் பெற அனுமதி வழங்க வேண்டும்” என வாதிட்டார்.

நீதிபதிகள் அறிவுறுத்தல்

இம்மறையீட்டைக் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்காகப் பட்டியலிடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினர். எனவே, வழக்கு நாளை முறைப்படி விசாரணைக்கு வரும்போது ஆஜராகி இது குறித்த விவரங்களைத் தெரிவிக்குமாறு பெரியகருப்பன் தரப்பு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தினர்.

MUST READ