தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதியை வென்றெடுக்க வேண்டும் என்பதே நமது இலக்கு என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


வன்னியர் சங்கத்தின் 47-ஆம் ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மற்றும் சிறுபான்மை சமூகங்களுக்கு முழுமையான சமூகநீதியை வென்றெடுக்கும் உன்னத நோக்கத்துடன், மருத்துவர் ராமதாஸ் அவர்களால் 46 ஆண்டுகளுக்கு முன் வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட நாள் இன்று. இந்தத் தொடக்க நாளில் பாட்டாளி சொந்தங்களுக்கும், சமூகநீதிக்காகப் போராடி வருபவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சமூகநீதி வரலாற்றின் முக்கிய நாள்:
வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட நாள் தான் தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் மிக முக்கியமான நாள் என்பதை எவராலும் மறுக்க முடியாது. இந்த நாளில் தான் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்; அதனடிப்படையில் ஒவ்வொரு சாதிக்கும், அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ப கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வகுப்புவாரி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற குரல் வலுப்பெற்றது.
ராமதாஸ் நிறைவேற்றிய 3 புரட்சிகர தீர்மானங்கள்:
வன்னியர் சங்கத் தொடக்க நாளில் மருத்துவர் ராமதாஸ் அவர்களால் 3 மிக முக்கியமான புரட்சிகரமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
தமிழ்நாட்டில் 2 கோடி மக்கள்தொகை கொண்ட மிகப் பெரிய சமுதாயமாக விளங்கும் வன்னியர்களுக்கு மாநிலத்தில் 20 விழுக்காடும், மத்தியில் 2 விழுக்காடும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கான 18 விழுக்காடு இட ஒதுக்கீட்டை, அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக 22 விழுக்காடாக உயர்த்த வேண்டும்.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு தகுந்த வகுப்புவாரி இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.
போராட்டத்தின் அடுத்தகட்ட மைல்கல்:
மருத்துவர் ராமதாஸ் அவர்களால் அப்போது தொடங்கப்பட்ட சமூகநீதி போராட்டம், தற்போது மிக முக்கியமானதொரு கட்டத்தை அடைந்திருக்கிறது. அதன் வெளிப்பாடாக, மத்தியிலும் மாநிலத்திலும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இவை நமது நீண்டகால சமூகநீதி போராட்டத்தில் எட்டப்பட்ட முதல் மைல்கல் ஆகும்.
அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதியை வென்றெடுக்க வேண்டும் என்பது தான் நமது இறுதி இலக்கு. அந்த இலக்கை முழுமையாக வென்றெடுக்க இந்த நன்னாளில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதியேற்றுக் கொள்வோம் என அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
